PUBLISHED ON : பிப் 23, 2025 12:00 AM

கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி அறிக்கை: கோவையில், 17 வயது சிறுமி, கல்லுாரி மாணவர்கள் ஏழு பேரால்
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி
அளிக்கிறது. அந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற
குற்றவாளிகளுக்கு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். ஆண்
குழந்தைகளுக்கு, பெண் குழந்தைகளை சக மனுஷியாக பார்க்க சொல்லி
தருவது அவசியம்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: தமிழக அரசு 2,000 மினி பஸ்களை இயக்குவதற்காக, தனியாருக்கு அனுமதி வழங்க, வழித்தடங்களை ஆய்வு செய்திருக்கிறது. இந்த வழித்தடங்களில் ஏற்கனவே இயங்கி வரும், நகர பஸ்கள் லாபகரமானதாக இல்லை என கூறி, நிறுத்தப்பட்டு விடும். இனி, பெண்களுக்கான இலவச பயணத்திற்கு மூடுவிழாதான். கொடுத்தவனே பறித்துக் கொண்டான் என்பது போல, இலவச பஸ் பயணத்தை நம்பி இருந்த மகளிர், புலம்பினாலும் ஒன்றும் ஆக போவதில்லை.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், பெண்களின் எதிர்ப்பை சம்பாதிப்பாங்களா என்பது கேள்விக்குரியது தான்!
தமிழக காங்., விவசாய பிரிவு பொதுச்செயலர் ஆர்.எஸ்.ராஜன் அறிக்கை:- தமிழக காங்., கமிட்டிக்கு புதிய பொறுப்பாளரை தலைமை அறிவித்துள்ளது. அவர் தமிழகம் வருவதற்குள், சில திறமையற்ற மாவட்ட தலைவர்கள் டில்லிக்கு சென்று, தங்கள் கையாலாகாத காரியத்தை மறைக்கும் நோக்கத்தில், சில வேலைகளை செய்துள்ளனர். தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக செயல்படும் அனைத்து மாவட்ட தலைவர்களையும் உடனடியாக நீக்க வேண்டும். தமிழக தலைமைக்கு முழு அதிகாரம் அளித்து செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்.
தமிழக காங்., தலைமைக்கு முழு அதிகாரம் கொடுத்திருந்தால் தான், கட்சி எப்பவோ வளர்ந்திருக்குமே!
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, 10 மீனவர்களையும், மூன்று விசை படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றது மிகவும் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு, உடனே இலங்கை அரசிடம் தொடர்பு கொண்டு, சிறை பிடிக்கப்பட்டுள்ள 10 தமிழக மீனவர்களையும், மூன்று விசை படகுகளையும் மீட்க வேண்டும்.
மத்திய பா.ஜ., அரசின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்துட்டு, எதிர்க்கட்சி மாதிரி கோரிக்கை வைக்கிறாரே... உரிமையுடன் பிரதமரை சந்தித்து பேசலாமே!

