PUBLISHED ON : மார் 02, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:
தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களில், ஒரு தமிழ்
ஆசிரியர் கூட இல்லை என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளில், தமிழே இல்லையே... இதற்கு என்ன
பதில்? தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், தமிழாசிரியர்கள் வேண்டும்
எனக் கேட்ட கேந்திரிய வித்யாலயாவிற்கு, இதுவரை தமிழ் ஆசிரியர்கள்
கொடுக்காதது ஏன்?
தி.மு.க., - எம்.பி., செல்வகணபதி பேட்டி: தற்போது தொகுதி வரையறை செய்தால், 39 லோக்சபா தொகுதி, 31 ஆகக் குறைந்துவிடும். ஆனால், ஹிந்தி பேசும் மாநிலங்களில், 200 தொகுதிகள் வரை அதிகரிக்கும். அந்த மாநிலங்களில் கவனம் செலுத்தி, பா.ஜ., மத்தியில் ஆட்சியை பிடித்துவிடும்.
'குளிக்க பயம்... சாப்பிட பயம்...' என்பது போல, 'தொகுதியைப் பிரிச்சிட்டாங்கன்னா, நம்ம கதை கந்தல்தான்...' என்ற பயம், ஆளுங்கட்சி முதல், அனைத்து கட்சிகளுக்கும் தொத்திக்கிச்சே... வேப்பிலை அடிச்சாக்கூட, இந்த பயம் தெளியாது போலிருக்கே!
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அறிக்கை: மின்வாரியத்தில், செலவை மிச்சப் படுத்துவதற்காக, 50,000 காலியிடங்களை நிரப்புவதில் கஞ்சத்தனம் காட்டுவது, நிர்வாக சீரழிவுக்கு வழிவகுக்கும். முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி, 30,000 கேங்மேன் காலிப்பணியிடங்களையும், இதரப் பணியிடங்களையும், உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெறுங்கையை முழம் போடலாம்... தப்பில்லை; அடுத்தவர் கையை வைத்து முழம் போட்டுக்கிட்டு இருக்கிற மின்வாரியத்துல, இதுக்கு மேலே எதையும் எதிர்பார்க்க முடியாதுங்கறது, இவருக்கே தெரியும்... எதற்காக இந்த அறிக்கை?
முன்னாள் அமைச்சர் செம்மலைஅறிக்கை: 'இதயம் கவர்ந்த ஆட்சி; தி.மு.க., ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர்' என, முதல்வர் ஸ்டாலின் சொன்னாலும், கடலுார் மாவட்ட நிகழ்ச்சி ஒன்றில் அவர், எம்.ஜி.ஆர்., பாடலை பாடியபோது, பார்வையாளர்கள் ஆர்ப்பரித்ததும், நரிக்குறவர் காலனியில், அவர் நடத்தி வைத்த திருமணத்தில், 'எம்.ஜி.ஆர்., வாழ்க, ஜெயலலிதா வாழ்க' என வந்திருந்தவர்கள் கோஷம் எழுப்பியதில் இருந்தும், மக்கள் யாரை விரும்புகின்றனர், எந்த ஆட்சியை எதிர்பார்க்கின்றனர் என்பதை, அவரே உணர்ந்திருப்பார்.
'சே... மக்கள் இன்னும் எம்.ஜி.ஆரைத் தாண்டி வர மாட்டேங்கிறாங்களே... இனி அவரைப் போல, தொப்பி போட ஆரம்பிச்சிடலாமா...' என்ற யோசனை, முதல்வர் மனதில் எழாமல் இருந்திருக்காது என்பது நிச்சயம்!