PUBLISHED ON : மார் 03, 2025 12:00 AM

அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலர் சரஸ்வதி பேச்சு: அயிரக்கணக்கான
கோடி ரூபாய் ஊழல் செய்து, 10 தலைமுறைக்கு, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த,
முன்னாள் அமைச்சர் அன்பழகன் சொத்து சேர்த்துள்ளார். அன்பழகன் இனி மேல் எந்த
தேர்தலிலும், இரட்டை இலையே இருந்தாலும், வெற்றி பெற முடியாது. அ.தி.மு.க.,
ஆட்சியின் திட்டங்கள், தி.மு.க., ஆட்சியில் முடக்கப்பட்டுள்ளன.
அ.தி.மு.க.,வில் இருந்து முனுசாமி, ஜெயகுமார், உதயகுமார் நீக்கப்பட்டால்
கட்சி நன்றாக இருக்கும்.
இதுக்கு பேர் தான், சொந்த காசிலேயே
சூனியம்வச்சிக்கிறதுங்கிறது... உங்க பங்காளி கட்சிக்காரங்களை இப்படி இவரே
காட்டிக் கொடுத்தா, யார் தான் இனி இவங்களை நம்பி, ஓட்டு போடுவாங்க?
காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேச்சு: ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை கண்டுபிடித்துள்ளோம். ஆனால், இன்று தெருவில் ஓடும் சாக்கடையை சரிசெய்ய முடியவில்லை. விஞ்ஞானத்தில் இந்தியா வளர்ந்திருந்தாலும், கழிவு நீரை மனிதர்கள் தான் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது... ரோடு ஒரு மழைக்குக் கூட தாங்குவதில்லை.
இவர் சொல்றது நுாத்துக்கு நுாறு சரி தான். இவர் அப்பா சிதம்பரம், காங்., ஆட்சியில் நிதியமைச்சரா பல ஆண்டுகள் இருந்திருக்கார். அவர் நினைச்சிருந்தா, மகன் சொல்ற விஷயங்களையெல்லாம் அப்போதே மாத்தி அமைச்சிருக்கலாம். அப்பாவுக்கு தோணாத விஷயங்களை, மத்தவங்ககிட்டே எதிர்பார்க்கலாமோ?
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு: பிரதமர் மோடி, 2023ம் ஆண்டு பேசியபோது, 'தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களில், 100 தொகுதிகள் காணாமல் போகும்' எனக் கூறி இருக்கிறார். தென் மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாட்டை சிறப்பாக நடைமுறைப்படுத்தியதால், அதே கணக்கெடுப்பின்படி, எம்.பி., தொகுதிகள் வரையறுக்கப்பட்டன; 2026ம் ஆண்டு வரை தான் இந்த சட்டம் செல்லும்.
இது தொடர்பா யாருக்கும் விஷயம் தெரியாதுன்னு நீங்க பேசுறீங்களோன்னு தோணுது. 2023ல் மோடி பேசுறப்ப, 'தொகுதி மறுவரையறையை காங்கிரஸ் ஆணித்தரமா வலியுறுத்தி வந்தது. அப்படி செய்தால், தென் மாநிலங்களில், 100 தொகுதிகள் காணாமல் போகும்' என சொன்னார். காங்கிரசை ஏன் வசதியா மறைச்சிட்டீங்க?
தமிழக அமைச்சர், சேகர்பாபு பேச்சு: தமிழகம் வரும்போதெல்லாம், இங்கு புதிய பிரச்னைகளை உருவாக்கி, மக்களை திசைதிருப்ப பார்க்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. அவர், தமிழகம் வந்தால் தமிழை விரும்புவேன் என்பார்; உத்தர பிரதேசம் சென்றால் ஹிந்தியை விரும்புவேன் என்பார்.
நீங்க சொன்னது மாதிரி எப்போது பேசினார் அமித் ஷா என்று சொன்னால் நல்லது. 'தொகுதி மறு வரையறையில் எந்த தொகுதியும் காணாமல் போகாது'ன்னு அவர் சொன்னது, தி.மு.க.,வின் பிரசாரத்திற்கு தக்க பதிலடியா அமைஞ்சு போனதால, அக்கட்சியால தொடர்ந்து இவ்விஷயத்துல அரசியல் பண்ண முடியலேங்கிறது தானே உங்க பிரச்னை?