PUBLISHED ON : மார் 09, 2025 12:00 AM

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி:மதுரையில், 'எய்ம்ஸ்'
மருத்துவமனை திட்டம் 2014 காங்., ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது.
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம், மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில்
கொண்டு வரப்பட்டது. காங்., கொண்டு வந்த திட்டங்களை தற்போது பா.ஜ.,
நடைமுறைப்படுத்தி வருகிறது.
வாஸ்தவம் தான்... 'நீட்'
நுழைவுத்தேர்வும் காங்., கொண்டு வந்ததுதான்... ஜி.எஸ்.டி.,யும் அவங்க
கொண்டு வந்தது தான்... அவற்றை பா.ஜ., நிறைவேற்றினா மட்டும் குய்யோ...
முய்யோன்னு ஏன் குதிக்குறீங்க?
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி: மேகதாது அணையை, மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக அரசால் கட்ட முடியாது. மத்திய அரசும் நம்மை மீறி ஒப்புதல் அளிக்க முடியாது. காரணம், உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது. எந்த ரூபத்திலும் மேகதாது அணை கட்டப்பட மாட்டாது. சட்டம் நம் பக்கம் இருக்கிறது; நியாயமும் நம் பக்கம் இருக்கிறது.
நீங்க இப்படி சொல்றீங்க... ஆனா, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், 'மேகதாது அணையை கட்டியே தீருவோம்'னு அடிச்சு சொல்றாரு... ரெண்டு பேரும் நல்லாவே அரசியல் பண்றீங்க என்பது தெரியுது!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: 'வேலியன்ட்' என்ற தலைப்பில் உருவாக்கியுள்ள சிம்பொனி இசை கோர்வையை இசையமைப்பாளர் இளையராஜா லண்டனில் அரங்கேற்றியுள்ளார். இசையில் ஆய்வுகளையும், புதிய புதிய தேடல்களையும் நிகழ்த்துபவர்களின் இலக்கு சிம்பொனி இசை கோர்வையை படைப்பதுதான். சிம்பொனி இசை கோர்வைகளை விட சிறந்த இசையை இளையராஜா ஏற்கனவே படைத்திருக்கிறார். சிம்பொனி இசையை ஆவணப்படுத்துவதற்காகவே அவர் வேலியன்ட் படைத்திருக்கிறார். இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை.
கண்டிப்பாக... ஒரு குக்கிராமத்தில் பிறந்து, இன்று உலக சாதனை படைத்துள்ள இளையராஜாவுக்கு மத்திய அரசு சிறந்த கவுரவத்தை வழங்கணும்!
சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன் பேச்சு: இன்று தமிழ் சினிமா நொந்து போயிருக்கிறது. சின்ன நிறுவனம் மட்டுமல்ல; பெரிய நிறுவனங்களும் சிரமத்தில் உள்ளன. இதற்கு காரணம் கார்ப்பரேட் கம்பெனிகள். அவர்கள்தான் நடிகர்கள் உள்ளிட்டோரின் சம்பளத்தை உயர்த்தி, சின்ன தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க முடியாத அளவிற்கு செய்து விட்டனர்.
கார்ப்பரேட் கம்பெனிகள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல... ஜெயிக்கிற குதிரைகள் மீதுதான் அவை பணம் கட்டும் என்பது இவருக்கு தெரியாதா?