PUBLISHED ON : ஜூலை 25, 2011 12:00 AM

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு: ஒரு நாட்டின் நிலப்பகுதியை பயங்கரவாதிகள் தீய நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டால், அதைத் தடுக்கவும், தகர்க்கவும் வேண்டிய சட்டப்பூர்வமான தார்மீக கடமை அந்த நாட்டுக்கு இருக்கிறது.
பயங்கரவாத இயக்கம் தானாகவே செயல்படுகிறது என, எந்த நாடும் தன்னுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.
இ.கம்யூ., தேசிய செயலர் ராஜா பேட்டி: ஊழலுக்கு எதிராக பா.ஜ., இரட்டை வேடம் போடுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் குறித்து குரல் எழுப்பும் பா.ஜ., கர்நாடகாவில் நடக்கும் ஊழல்கள் குறித்து கண்டு கொள்ளாமல் இருக் கிறது. இது, போலித்தனமான அரசியல்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேட்டி: நான் யாருக்கும் சட்டத்தை வளைத்து உதவி செய்தது கிடையாது. கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற பின், ஒரு சுரங்கத்திற்கு கூட உரிமம் அளிக்கவில்லை. இப்போது இயங்கி வரும் எல்லா சுரங்கங்களுக்கும் முந்தைய முதல்வர்கள் தான் அனுமதி அளித்துள்ளனர். இரும்பு தாது ஏற்றுமதிக்கு கர்நாடகாவில் தடை விதித்தது, சட்ட விரோத சுரங்கங்களுக்கு கடிவாளம் போட்டதும் நான் தான்.
சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் பேச்சு: கடந்த ஆட்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கென தனி நலவாரியம் உருவாக்கப்பட்டது; அது, முற்றிலும் செயல் இழந்துள்ளது. மாற்றுத் திறனாளி இறந்தால், அவர்கள் குடும்பத்துக்கு வழங்க வேண்டிய உதவித் தொகை உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன.
ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் பேட்டி: நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, ஒவ்வொரு ஆண்டும், 8 விழுக்காட்டிற்கு அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளது என, ஐ.மு., கூட்டணி அரசு கூறுகிறது. இது உண்மையாக இருந்தால், அந்த அளவிற்கு வேலைவாயப்பு அதிகரித்திருக்க வேண்டும்.
கடந்த தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்த, முன்னாள் மத்திய அமைச்சர் பா.ம.க.,வின் அன்புமணி பேட்டி : தி.மு.க., - அ.தி.மு.க., எல்லாம் ஒரே கட்சி தான்; தலைமை தான் வேறு. மது விற்கும் பணத்தில், இலவசங்களை வழங்கி வருகின்றனர்.