PUBLISHED ON : ஆக 23, 2011 12:00 AM

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேச்சு: ஆட்சியாளர்கள், அரசு அலுவலர்கள் பணியாற்ற, தகுதியற்றதாக கூறப்படும் புதிய தலைமைச் செயலக வளாகம், மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி அமைக்க மட்டும் எப்படி தகுதியாகும்?
இ.கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன் பேட்டி: மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கடும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பேச்சு : ஊழலில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்கள் சிலர், கோர்ட் உத்தரவிட்ட பிறகே பதவி விலகி உள்ளனர். இதை, பிரதமர் மன்மோகன் ஏற்கனவே செய்திருக்க வேண்டும். ஊழலை ஒழிக்க, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதில் தாமதிக்கக் கூடாது.
மத்திய தொலைத்தொடர்புத் துறை இணை அமைச்சர் சச்சின் பைலட் பேட்டி: கிராமப்புற மக்களுக்கு இன்றும் வங்கி சேவை எளிதில் கிடைப்பதில்லை. இதைக் கருத்தில் கொண்டு, தபால் நிலையங்களில் வங்கி சேவை அளிக்க, ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களை கணினிமயமாக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலர் மீனாட்சி சுந்தரம் அறிக்கை: காலாண்டு தேர்வுக்கு குறைந்த அளவே பாடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பழைய பாடப்புத்தகங்களைவிட, சமச்சீர் பாடப் புத்தகத்தின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, பாடங்களை கற்பிக்க ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி அளிக்க வேண்டும்.
பல்கலைக் கழக மாணவர் கூட்டமைப்பின் தலைவர் கமலேஷ் அறிக்கை: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னர்கள் செய்யும் தவறை, மற்றவர்கள் தட்டிக் கேட்க முடிவதில்லை. எனவே, துணைவேந்தர்களை நியமிக்கும் பொறுப்பை மாநில முதல்வருக்கு வழங்க வேண்டும். பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுக்களில் மாணவர்களையும் உறுப்பினர்களாக சேர்ப்பது, சென்னையில் கல்லூரி மாணவர்கள் கொண்டாடும் பஸ் தினத்திற்கு தடை விதித்தல் ஆகிய முடிவுகளை எடுக்க வேண்டும்.