PUBLISHED ON : ஆக 10, 2024 12:00 AM

பா.ஜ., மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேட்டி: ஆந்திராவை இரண்டு மாநிலங்களாக பிரித்ததால், தலைநகர வளர்ச்சிக்காக, மத்திய அரசு, 15,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. அதேபோல், தமிழகத்தையும், சேலம், திருச்சி, மதுரை போன்ற நகரங்களை தலைநகரமாக வைத்து, மூன்று மாநிலங்களாக பிரித்தால், ஒரு தலைநகருக்கு 15,000 கோடி வீதம், 45,000 கோடி ரூபாய் 15 நாட்களில், மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தரத் தயார்.தமிழகத்தில் தாமரையை மலர வைக்கணும்னா, இப்படி எல்லாம் கூட செய்வோம்னு சொல்ற மாதிரி இருக்கே!
இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் பஷீர் அகமது அறிக்கை: மத்திய அரசு, வக்புசொத்துக்களை முடக்கும் விதமாகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் விதமாகவும், 40க்கும் மேற்பட்ட திருத்தங்களை செய்ய இருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு, பட்ஜெட் மீதான விவாதத்தில் இருந்து தப்பிக்க விரும்புகிறது.அப்ப, அடுத்த பட்ஜெட் வரைக்கும் மத்திய அரசு எந்த அசைவும் இல்லாம இருக்கணும்னு சொல்றாரா?
ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யா அறிக்கை: ஒலிம்பிக் பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், பதக்க வாய்ப்பு கைக்கு எட்டிய துாரத்தில் இருந்தும், அதிகாரவர்க்க சதியால் பிடுங்கப்பட்டு விட்டது என, 'இண்டி' கூட்டணி எம்.பி.,க் கள் எழுப்பிய சந்தேகத்தை புறக்கணிக்க முடியாது. 'அப்படி இல்லை; நாங்கள் சரியாகத்தான் இருக்கிறோம்' என, இந்திய ஒலிம்பிக் சங்கம் நினைக்குமேயானால் வலிமையாக மேல் முறையீடு செய்து, வினேஷ் போகத்தை மீண்டும் களத்தில் விளையாட வைக்க வேண்டும்.கிரிக்கெட்டில் வேணும்னா நம்ம பி.சி.சி.ஐ., சொல்றதை ஐ.சி.சி., கேட்கும்... ஒலிம்பிக்கில் அதெல்லாம் எடுபடுமா?
தமிழக பா.ஜ., சமூக ஊடகப் பிரிவு பார்வையாளர் அர்ஜுனமூர்த்தி அறிக்கை: மக்கள் தந்த பதவி மக்களாலே பறிக்கப்படும் என்பதற்கான உதாரணங்கள், உலகத்தில் பல உள்ளன. லிபியாவில் கடாபி, பாகிஸ்தானில் முஷரப், இந்தோனேஷியாவில் சுகர்த்தோ, இலங்கையில் ராஜபக்சே, தற்போது வங்கதேசத்தில் ஹசீனா. இதற்கு பொது உளவியல் காரணம் என்னவென்றால், தனி மனித ஒழுக்கமும், மனிதநேயமும், அரசியல், அரசாங்க செயல்பாட்டில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை முன்னெடுக்காத தலைவர்களின் பின்னடைவே ஆகும். அதெல்லாம் சரி... இதை, இங்கிருக்கும் எந்த தலைவருக்கு இவர் எச்சரிக்கையா சொல்றாரு?

