PUBLISHED ON : அக் 27, 2024 12:00 AM

தமிழக அரசின் ஓய்வு பெற்ற தலைமை செயலர் இறையன்பு பேச்சு: ஒவ்வொரு
பெற்றோரும், தங்கள் குழந்தைகளிடம், 'நன்றாக படி; நல்ல பணிக்கு செல்; நிறைய
சம்பாதித்து வசதியாக வாழ்ந்தால் தான் சமுதாயத்தில் மதிப்புடன் இருக்கலாம்'
என, சொல்லி கொடுக்கின்றனர். எந்த பெற்றோரும், 'அன்பாக இரு; கருணையோடு இரு'
என, சொல்லி கொடுத்ததாக தெரியவில்லை. அன்பு இல்லாத சமூகத்தில், மற்றவை
எல்லாம் இருந்தால், ஏதாவது பயனிருக்குமா என்பதை சிந்தித்து பார்க்க
வேண்டும்.
உண்மை தான்... ஆனாலும், இந்த காலத்துபெற்றோர், 'அன்பு, கருணையை வைத்து கால் கிலோஅரிசி வாங்க முடியுமா?'ன்னு கேட்பாங்களே!
தமிழக துணை முதல்வர் உதயநிதி பேச்சு: 'விளையாட்டுவீரர்களுக்கு பொருளாதாரம்ஒரு தடையாக இருக்கக் கூடாது' என, முதல்வர் ஸ்டாலின், தமிழக சாம்பியன்ஸ் அறக்கட்டளையை கடந்த ஆண்டு துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் வாயிலாக, 700 வீரர்களுக்கு, 12 கோடி ரூபாய் அளவிற்கு நிதி உதவிகளை வழங்கிஉள்ளோம்.
நல்ல விஷயம்... உருவான வீரர்களுக்கு நிதி வழங்குவதை போல, பள்ளி அளவிலேயே புதுப்புது வீரர்களை உருவாக்கவும் முயற்சி எடுக்கலாமே!
மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர்முருகன் பேச்சு: கல்வித் துறையில் மத்திய அரசு பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. நாட்டில், 'எய்ம்ஸ்' மருத்துவமனைகளின் எண்ணிக்கை, 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் புதிய பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தேசிய கல்வி கொள்கை வாயிலாககல்வியும், கல்வித் துறையின்உள்கட்டமைப்புகளும், நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வருகின்றன.
சொல்றதெல்லாம் சரிதான்... தமிழகத்துல தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் வழியைக் காணோமே... மாநில அரசை எப்படி வழிக்கு கொண்டு வரப் போறீங்க?
தமிழக சமூகநலத் துறை அமைச்சர் கீதாஜீவன் பேட்டி: பள்ளி மற்றும் கல்லுாரிகளில், 'போக்சோ' குறித்த புகார்களை முறையாக தெரிவிக்க வேண்டும்என்ற விழிப்புணர்வை, '1098' என்ற எண் வாயிலாக செயல்படுத்தி வருகிறோம். பெண் குழந்தைகள் முன்பை விட தைரியமாக, தங்களுக்கு நேர்ந்த சீண்டல்கள் குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
நல்ல விஷயம் தான்... சீண்டுவோரை, 'வெளுத்து வாங்கும்' தற்காப்பு கலைகளையும் பெண் குழந்தைகளுக்கு உங்க துறை வாயிலாக சொல்லி கொடுக்கலாமே!