PUBLISHED ON : டிச 24, 2024 12:00 AM

மா.கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேச்சு:அம்பேத்கர் குறித்து
அவதுாறாக பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரின் கால் துாசிக்கு
கூட சமமில்லை. அம்பேத்கரின் சிந்தனை, தத்துவம் குறித்து குறைந்தபட்சம்
அறிந்திருந்தால் கூட, அவரது வாசனை குறித்தாவது தெரிந்திருக்க முடியும்.
கற்பூர வாசனை எதற்கோ தெரியாது என சொல்வர். அதுபோல் தான் அமித் ஷா,
அம்பேத்கர் குறித்து பேசியுள்ளார்.
அது சரி... அம்பேத்கர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்னு, 'டக்'குனு, நீங்க சொல்லுங்க பார்ப்போம்?
தமிழக மகளிர் காங்., தலைவர் ஹசீனா சையது பேட்டி: கேரள மாநிலம், வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, பார்லிமென்ட் எம்.பி.,யாகியுள்ள பிரியங்கா, காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழுவில் உறுப்பினராக இடம் பெற வேண்டும். அப்போது தான், நாடு முழுதும், 33 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், காங்., சார்பில் சட்டசபை, பார்லிமென்டிற்குள் பெண்கள் கால் எடுத்து வைக்க முடியும்.
இவங்களுக்கும் சட்டசபைக்குள் கால் வைக்கணும்னு ஆசை வந்துடுச்சோ?
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேச்சு: கோவையில், 1998ல் குண்டு வைத்து, 58 பேரை படுகொலை செய்தது, 200க்கும் மேற்பட்டவர்களின் உடல் உறுப்புகளை சிதறடித்தது தான், தடை செய்யப்பட்ட அல் - உம்மா இயக்க தலைவர் பாஷாவின் சாதனை. அப்படிப்பட்டவரை தியாகி போல கருதி நடந்த இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியதுடன், பயங்கரவாதிகளை அந்த ஊர்வலத்தில் பங்கேற்க அனுமதித்தது குறித்து, அரசு கவலை கொள்ளாததை வன்மையாக கண்டிக்கிறேன்.
பொது பிரச்னைக்கு ஊர்வலம் போனா தான், திராவிட மாடல் ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்துவர்!
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: சமீபத்தில் வெளியிடப்பட்ட சி.ஏ.ஜி., அறிக்கையில், தமிழக சுகாதாரத் துறையில், 28 சதவீதம் காலி பணியிடங்கள் இருப்பதாகவும், மருத்துவப் பணியாளர்கள் சேர்க்கையில், தமிழகம் பின்தங்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், பணியாளர் கட்டமைப்பையும்உயர்த்த வேண்டியது அரசின் கடமை.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறவங்களும், அதிக வேலை பளுவால நோயாளியா மாறிடுவாங்க போலிருக்கே!