PUBLISHED ON : டிச 26, 2024 12:00 AM

ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: தி.மு.க.,
 ஆட்சியில் தான் பயங்கரவாதமும், பிரிவினைவாதமும் தலை துாக்கிக் 
கொண்டிருக்கிறது. 'ரெட் ஜெயன்ட்' நிறுவனம் வெளியிட்டுள்ள விடுதலை -- 2 
திரைப்படம் முழுக்க, நக்சல்களுக்கு ஆதரவாக உள்ளது. இந்த திரைப்படம், 
இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டுதலை ஏற்படுத்தும். இதுபோன்ற திரைப்படங்களை 
மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்.
சினிமாவை சினிமாவா மட்டும் பார்க்கணும்... நம்ம ஊர்ல தான் படத்தை பார்த்து, மக்கள் அந்த கேரக்டராகவே மாறிடுறாங்க!
 தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நரசிம்மன் பேட்டி: 'மாநில அரசு சந்தை மதிப்பீட்டு தொகையை நிர்ணயித்து, அதற்கு முதல்வர் அனுமதி வழங்கி விட்டால், சாலை பணிகளுக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கான இழப்பீட்டு தொகை எவ்வளவு கோடிகளில் இருந்தாலும், அதை மத்திய அரசு வழங்க தயாராக இருக்கிறது' என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை, அந்தந்த மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
நல்ல விஷயம் தான்... ஆனால், மத்திய அரசை நம்பி முதல்வர் ஒப்புதல் கொடுத்துட்டு, அப்புறம் அவங்க கைவிரிச்சிட்டா நிலைமை சிக்கலாகிடுமே!
தமிழக காங்., பொதுச்செயலர்காண்டீபன் பேச்சு: 'எங்கும் கொலை, எதிலும் கொலை என்பது தி.மு.க., ஆட்சி சட்டம் - ஒழுங்கின் அவல நிலை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வாய்கூசாமல் பேசுகிறார். கொலைகளுக்கும், சட்டம் - ஒழுங்கிற்கும் சம்பந்தமில்லை என்பதை முதலில் அவர் உணர வேண்டும்.
விநாயகர் ஊர்வலம் போன்ற ஆன்மிக நிகழ்ச்சி மட்டும் தான் இவங்க கண்களுக்கு சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக தெரியும்!
தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர் நடிகர் சரத்குமார் அறிக்கை: சில வாரங்களுக்கு முன், ஓசூரில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகே வழக்கறிஞர் வெட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தற்போது நெல்லையில் நீதிமன்ற வளாகம் முன் மாயாண்டி என்ற இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டது, அதிர்ச்சி அளிக்கிறது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும், கொலை செய்யப்பட்ட மாயாண்டி கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதால், இந்த சம்பவத்திற்கும் முன்விரோதமே காரணம் என, சொல்லி கடந்து விடும் சூழல் தென்படுகிறது.
முன்விரோதமோ, பின் விரோதமோ, கோர்ட் வாசல்லயே குற்றங்கள் நடக்கிறது தானே பிரச்னை!

