PUBLISHED ON : ஜன 06, 2025 12:00 AM

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர், டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை:
குமரியில்
திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை நடத்தும் வாய்ப்பை, கருணாநிதி
உருவாக்கி தந்துள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் பெருமையாக குறிப்பிட்டார். அதே
நேரத்தில், அரசு மருத்துவர் களுக்காக கருணாநிதி உருவாக்கி தந்துஉள்ள
அரசாணையை அமல்படுத்த மறுப்பதன் வாயிலாக, மிகப்பெரிய வரலாற்று பிழையை
செய்வதாக தெரிகிறது.
டாக்டர்களுக்கு கருணாநிதி வெளியிட்ட அரசாணை, வெள்ளி விழா ஆண்டிற்கு வந்தால் தான் நடவடிக்கை எடுப்பரோ என்னவோ?
திரைப்பட இயக்குனரும், பா.ஜ., பிரமுகருமான கங்கை அமரன் பேட்டி:
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, மது, போதை கலாசாரம் பெருகி வருகிறது. இந்த கலாசாரத்தால் படப்பிடிப்புகள் நடத்தவும் இடையூறாக உள்ளது.
தமிழக அரசு இந்த விவகாரங்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆட்சிக்கு வரும் முன், 'நாங்கள் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம்' என்று கூறிய முதல்வர், ஆட்சிக்கு வந்து மவுனமாக உள்ளார்.
கலாசார சீரழிவுக்கு சினிமா காரணம்னு ஒரு பக்கம் சொல்ல, கலாசார சீரழிவால் சினிமா எடுக்க முடியலைனு இவர் சொல்றது வேடிக்கை தான்!
தமிழக, பா.ஜ., விவசாய அணி தலைவர், ஜி.கே.நாகராஜ் பேச்சு:
இந்தியாவில், முதல்வர்கள் வரிசையில், 14வது பணக்காரர் என்றும், கடனே இல்லாத தமிழக முதல்வர் ஸ்டாலின் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், தமிழகம் தேசிய அளவில், கடன் வட்டி கட்டுவதில் முதல் மாநிலமாக உள்ளது.
ஏதாவது ஒண்ணுலயாவது முதலிடத்துல இருக்காங்களேன்னு சந்தோஷப்படுங்க!
தமிழக, காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு பேட்டி:
அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த நபரை அரசு கைது செய்துள்ளது. அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எல்லாருடைய கருத்து; காங்கிரஸ் கருத்தும் அதுவே.
இனி, இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் இருக்க, அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என, நம்புகிறேன்.
என்ன தான் கூட்டணி கட்சியா இருந்தாலும், இவருக்கு தனிப்பட்ட ஆதாயம் எதுவும் இருக்கிற மாதிரி தெரியலையே... அப்புறம் எதுக்கு, அரசை தடவி கொடுக்கிற மாதிரி இவ்வளவு, 'ஜால்ரா!'

