PUBLISHED ON : ஜன 08, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி: தமிழகத்தில்
தி.மு.க., ஆட்சியை எதிர்ப்பவர்களும் இருக்கின்றனர்;
ஆதரித்தவர்களும் இருக்கின்றனர். அ.தி.மு.க.,ஆட்சியில், முன்னாள்
முதல்வர் பழனிசாமியைஎதிர்த்து நடந்த எல்லா போராட்டங்களுக்கும்
அனுமதி வழங்கப்பட்டது. அது போன்ற பக்குவம் தி.மு.க.,விற்கு இல்லை.
புத்தாண்டு பிறந்ததில் இருந்து அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக மக்கள்
மாறியுள்ளனர்.
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பேட்டி: மா.கம்யூ., கட்சியை 25 கோடி ரூபாய்க்கு தி.மு.க.,விடம் அடமானம் வைத்துவிட்டு, இன்றைக்கு அவசர நிலை போல் இருப்பதாக அக்கட்சியின் முன்னாள் செயலர் கூறுவது வேடிக்கை. தங்கள் பரிசுத்தத்தை நிலைநாட்ட, தி.மு.க., கூட்டணியை விட்டு அவர்கள் வெளியேற வேண்டும். இவர்கள் வெளியில் வருவதால், தி.மு.க., ஆட்சி கவிழாது; தார்மீக பொறுப்பாவது காப்பாற்றப்படும்.
அவங்க வெளியே வந்து பா.ஜ.,வுக்கு என்ன லாபம்...? கொள்கை ரீதியா அவங்களுடன் காம்ரேட்கள் சேர மாட்டாங்களே!
த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை, எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, கூட்டணி கட்சிகள் வாயிலாகவும் மக்கள் தெரிந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு உதாரணமாக, 'வேங்கைவயல் சம்பவம் பற்றி சட்டசபையில் விவாதிக்க வேண்டும்' என்ற வி.சி., கட்சியின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் உள்ளது.
அந்த மாதிரி கவன ஈர்ப்பு தீர்மானத்தை எல்லாம் கொண்டு வர, இவரோட கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எப்ப சட்டசபைக்குள் போகப் போறாங்க?
தி.மு.க., தேர்தல் பணிக்குழு செயலர் செல்வேந்திரன்பேட்டி: சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது தான். அவ்வழக்கு தொடர்பாக, சில மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அச்சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன. ஆனால், சில அரசியல் கட்சிகள் யூகங்கள் அடிப்படையில் அவதுாறு கிளப்பி, பழி போட்டு வருகின்றன. தி.மு.க., மீது, அரசியல் கட்சிகளால் அவதுாறு வலை பின்னப்படுகிறது. அது முறியடிக்கப்படும்.
அதானே... அவதுாறு வலைகளில் எல்லாம் தி.மு.க.,வினர் அவ்வளவு சீக்கிரம் சிக்குவரா என்ன?

