PUBLISHED ON : ஜன 09, 2025 12:00 AM

காங்., கட்சியை சேரந்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி:
தமிழக கவர்னர் ரவி, சட்டசபையில் தமிழ்த்தாய்
வாழ்த்து முடிந்தபின், தன் உரையை படிக்காமல் தேசிய கீதம் பாட வலியுறுத்தி
உள்ளார். சம்பிரதாயம், விதிகளின்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, கவர்னர்
உரையை முடித்தபின், தேசிய கீதம் பாடப்படும். எந்த சட்டசபையிலும் முதலில்
தேசிய கீதம் பாடப்படுவதில்லை.
முதலில் தேசிய கீதம் பாடினால் தேசத் துரோகமாகிடுமா என்ன...? கவர்னரை வெறுப்பேற்றணும்னு முதல்லயே முடிவு பண்ணிட்டாங்க என்பதுதான் கலப்படமில்லாத உண்மை!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
கடந்த, 2021 சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, தி.மு.க., அரசு, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திருந்தால், இதர அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும், அவர்களுக்கும் கிடைத்திருக்கும். ஆனால், ஆட்சிக்கு வந்தபின் பணி நிரந்தரம் செய்ய மறுப்பது, அவர்களுக்கு செய்யும் துரோகம். தற்போது, 12,500 ரூபாய் ஊதியத்தால், பெரும் பொருளாதார நெருக்கடியில், பகுதிநேர ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
பகுதிநேர ஆசிரியர்கள் தவிர, மற்ற தரப்பினருக்கு தந்த வாக்குறுதியை எல்லாம் நிறைவேத்திட்ட மாதிரி பேசுறாரே!
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பேட்டி:
தி.மு.க.,வின் அராஜக ஆட்சியில், கவர்னர் சட்டசபையை விட்டு வெளியேறாமல் வேறு என்ன செய்வார்? தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது வழக்கமான ஒன்று; அதேபோல தேசிய கீதம் பாடுவதும் மரபு. தேசிய கீதம் இரண்டு முறை பாடப்படுவதில் என்ன தவறு...அதை மறுத்ததால் கவர்னர் வெளியேறி விட்டார்.
கவர்னரை கண்டாலே, வேப்பங்காய் சாப்பிட்ட, 'பீலிங்'இருக்கும்போது, இப்படி ஏதாவது செஞ்சாதானே, அவர், தானா வௌியேறுவாரு...விஞ்ஞானப்பூர்வமா யோசிங்கம்மா!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேட்டி:
தமிழகத்தில் அறிவிக்கப்படாத, 'எமர்ஜென்சி' அமல்படுத்தப்பட்டுள்ளதா என கேட்ட மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணனை, 'வேண்டியதை பெற்றுக்கொள்ளலாம்' என, அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். கம்யூனிஸ்டை தி.மு.க., எந்த இடத்தில் வைத்திருக்கிறது என, புரிகிறது. தி.மு.க., கூட்டணியில் பயணிப்பவர்கள் மக்கள் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும். தமிழகத்தின் நம்பிக்கை யாக பழனிசாமி உள்ளார்.
'தமிழகத்தின் நம்பிக்கையா இருக்கிற பழனிசாமி பக்கம் வந்துடுங்க... அவங்க தர்றதைவிட கூடுதலா போட்டுக் கொடுக்கிறோம்'னு நாசுக்கா சொல்றாரோ?

