PUBLISHED ON : ஜன 13, 2025 12:00 AM

ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ அறிக்கை:
போக்குவரத்து கழகங்கள் லாப
நோக்குடன் செயல்படவில்லை. இழப்பு ஏற்படும் என, தெரிந்தே, 10,000க்கும்
மேற்பட்ட கிராமப்புற மலை வழித்தடங்களில் சேவை நோக்கத்துடன் பஸ்கள்
இயக்கப்படுகின்றன. மாணவர்கள், பெண்கள் என, சமூகத்தின் பல பிரிவினருக்கு
இலவச பஸ் சேவை அளிக்கும் அரசின் திட்டம், போக்குவரத்து கழகங்களில்
அமல்படுத்தப்படுகிறது. எனவே, போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்ட நாள்
கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
தொழிலாளர்களின் பிரதான கோரிக்கை ஊதிய உயர்வு... அதை தர முடியாததுக்கு காரணத்தை தான், இவரே பட்டியல் போட்டு சொல்லிட்டாரே!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை:
கவர்னரின் தமிழ் மீதான வெறுப்பு மற்றும் தமிழ் மண்ணின் மரபுகள் மீதான, அவரது வெறுப்புணர்வு நகர்வுகள், மக்களிடம், பா.ஜ., மீதான அபிப்பிராய பேதமாக மாறுவதோடு, தி.மு.க., மீதான அனுதாபமாகவும், அது மடைமாற்றமாகிறது என்பதே உண்மை.
இது, பா.ஜ.,வின் இயல்பான வளர்ச்சிக்கு இடையூறு என்பதோடு, பல வேளைகளில் மக்களின் விழி சிவக்கும் கோபங்களில் இருந்து கவர்னரின், 'மாப்பிள்ளை முறுக்கு' தி.மு.க.,வை காப்பாற்றுகிறது என்பதே யதார்த்தம்.
இவ்வளவு நல்லது செஞ்சிட்டு இருக்கிற கவர்னரை கண்டிப்பதும், அவர் படத்திற்கு செருப்பு மாலை போடுவதும், தி.மு.க., காட்டும் நன்றிக்கடனான்னு கேட்பார் போலிருக்கே!
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி அறிக்கை:
ஜாதி, மதங்களை தாண்டி, தமிழர்களாக நாம் ஒருங்கிணைந்து கொண்டாடக்கூடிய பண்பாட்டு பண்டிகை பொங்கல். மற்ற எல்லா பண்டிகைக்கும் மதச்சாயம் இருக்கிறது. நமக்கும், கிறிஸ்துமஸ், ரம்ஜான், தீபாவளி பிடிக்கும். ஆனால், அனைவரையும் இணைத்து, தமிழ் என்ற உணர்வோடு கொண்டாடக்கூடிய ஒரே பண்டிகை பொங்கல் திருவிழா மட்டும் தான்.
பரிசு தொகுப்பில், 1,000 ரூபாயை, 'கட்' பண்ணிட்டு, இவ்வளவு, 'பில்டப்' எதுக்கு?
தமிழக, காங்., - எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் அறிக்கை:
தமிழ் தேசியம் என்ற பெயரில் தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் எதிராக தொடர்ந்து செயல்படும் சீமான், பா.ஜ.,வின், 'பி டீம்' ஆக வெளிப்படையாக செயல்படுகிறார். திராவிட இயக்கத்தையும், தமிழர் பண்பாட்டையும் சீர்குலைக்க, கவர்னர் ரவி வாயிலாக பிரசாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அதே, பா.ஜ., தான் சீமானையும் இயக்குகிறதோ என்ற அச்சம் எழுகிறது.
சீமானை யார் இயக்கினால் இவங்களுக்கு என்ன... யாரையாவது எந்த டீமிலாவது சேர்த்து விடுறதையே ஒரு வேலையா வச்சிருந்தா எப்படி?