PUBLISHED ON : ஜன 23, 2025 12:00 AM

இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன் பேட்டி: ஈரோடு
கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க.,வின் வெற்றி அவ்வளவு
எளிதல்ல. அரசுக்கு எதிராக ஓட்டளிக்க மக்கள் தயாராக உள்ளனர்.
அரசுக்கு எதிராக,
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு: 'பல்கலைகளுக்கான துணைவேந்தர் நியமனத்தில் கவர்னர் தலையீடு கூடாது' என்பது உச்ச நீதிமன்றத்தில், தி.மு.க.,வின் இன்றைய வாதம். ஜெயலலிதா ஆட்சியில், 'தமிழக பல்கலைகளுக்கு வேந்தராக, கவர்னருக்கு பதில் முதல்வரே இருக்க வேண்டும்' என கொண்டு வந்த சட்ட முன்வடிவை, தி.மு.க., எதிர்த்ததோடு, கவர்னருக்கு ஆதரவாக இருந்தது. இதுவே, தி.மு.க.,வின் உறுதியற்ற நிலைப்பாட்டுக்கு உதாரணம்.
அப்ப, ஜெயலலிதா எதிரியா இருந்ததால், அந்த சட்ட முன்வடிவை எதிர்த்தனர்... இப்ப, கவர்னர் எதிரி என்பதால் அவரை எதிர்க்கின்றனர்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: குடியாத்தம் இடைத்தேர்தல் தான், அன்று காமராஜரின் முதல்வர் இருக்கையை உறுதி செய்தது. கட்சி துவங்கிய ஆறே மாதத்தில் நடந்த திண்டுக்கல்இடைத்தேர்தல் தான்,எம்.ஜி.ஆரை முதல்வர் இருக்கைக்கு முன்மொழிந்தது. மதுரை கிழக்கு, மருங்காபுரி இடைத்தேர்தல்கள் தான், ஜெயலலிதாவை முதல்வர் ஆசனத்திற்கு ஆயத்தப்படுத்தியது. இடைத்தேர்தல் என்பது வருங்காலத்தை வசந்த காலமாக்குவதற்கான வாய்ப்பு.
அ.தி.மு.க., இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு, டிபாசிட் இழக்கணும்னு எதிர்பார்த்து, ஏமாந்த விரக்தி நல்லாவே தெரியது!
தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் பேட்டி: ஓட்டுக்காக ஈ.வெ.ரா.,வை பெரிய ஆளாகக் காட்டுகின்றனர். அவர் எந்த சாதனையும் செய்யவில்லை. ஈ.வெ.ரா., தீண்டாமையை ஒழித்தார் என்கின்றனர். இப்போதும், ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர் மாவட்டங்களில் தீண்டாமை உள்ளது.
ஈ.வெ.ரா.,வைப் பற்றி பேசி பரபரப்பான சீமானைப் போல, நாமும் ஆகணும்னு நினைச்சுட்டாரோ?

