PUBLISHED ON : ஜன 25, 2025 12:00 AM

தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை: வெள்ள நிவாரணம், கல்வி நிதி, 100 நாள் வேலைக்கான நிதி ஆகியவற்றை ஒதுக்காமல், தமிழக மக்களை வாட்டி வதைத்து வரும் பா.ஜ., அரசோடு மறைமுக கூட்டணி வைத்து, மத்திய அரசை கண்டித்து ஒரு வார்த்தை பேச முடியாமல் வாய் மூடி இருப்பது ஏன்? தன் இயலாமையை மறைக்கவே, தி.மு.க., ஆட்சி மீது அவதுாறு பரப்புவதை பழனிசாமி வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
தற்போதைய முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தப்ப பேசாததையா பழனிசாமி பேசிட்டாரு?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு: தமிழக மக்கள் பொருளாதாரம், கல்வியில் முன்னேற்றத்துடன் சிறந்து விளங்க எம்.ஜி.ஆர்., தான் முக்கிய காரணம். எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு அ.தி.மு.க., பிளவுபட்டது. இயக்கத்தை ஒன்றிணைத்து, இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்து, அ.தி.மு.க.,வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியவர் ஜெயலலிதா.
என்ன சொல்ல வர்றாரு... 'ஜெயலலிதா கொடுத்துட்டு போன ஆட்சியை தி.மு.க.,விடம் தாரைவார்த்துட்டார் பழனிசாமி'ன்னு அடுத்து சொல்வாரோ?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி: தி.மு.க., அரசை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் மக்களிடத்திலும், அனைத்து அரசியல் கட்சிகளிடத்திலும் வேகமாக பரவி வருகிறது. நாட்கள் செல்ல செல்ல பா.ஜ., மட்டுமல்ல; தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளும் அ.தி.மு.க., கூட்டணிக்கு வர குரல் ஒலிக்கும். வெற்றிக் கூட்டணியை அ.தி.மு.க., அமைக்கும்.
தி.மு.க., அணியில் இருந்து கட்சிகள் வந்தால் தான், உங்க அணி வெற்றிக் கூட்டணியா மாறும்னு ஒப்புக்குறீங்களோ?
அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் கே.பி.முனுசாமி பேட்டி: 'அவதுாறு பரப்பியும், வெற்று வாக்குறுதி களை கொடுத்தும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரப் பார்க்கிறது' என, முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். வெற்று வாக்குறுதியை பற்றி அவர், தன்னை மறந்து கூறியுள்ளார். ஏனெனில், 520 வாக்குறுதிகளை கொடுத்த அவர், அதை நிறைவேற்றி விட்டாரா என சிந்தித்து பார்த்து பேச வேண்டும். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மக்களிடத்தில் தெளிவாக உண்மைகளை எடுத்து கூறி வருகிறார்.

