PUBLISHED ON : பிப் 02, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி: அ.தி.மு.க.,
பொதுச்செயலர் பழனிசாமி முதல்வராக இருந்தபோது, ரயில்வே மேம்பாடு,
மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து
நிதி பெற்றார். ஆனால், இன்று தேவையான நிதியை பெற முடியவில்லை. அதில்,
தமிழக முதல்வர் அக்கறை செலுத்தவில்லை என்று எதிர்க்கட்சிகள்
கூறினால், ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது.
சிறுபான்மையினருக்கு துணை நிற்பதை யாரும் தடுக்கலை... அதே நேரம், ஓட்டு போட்டு அரியணையில் அமர்த்திய பெரும்பான்மையினரை, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தக்கூடாது!
கள் இயக்க தலைவர் நல்லசாமி பேட்டி: மேட்டூர் அணை நடப்பாண்டில் மூன்று முறை முழு கொள்ளளவை எட்டினாலும், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி சாத்தியமில்லாமல் போனது. இது குறித்து, எந்த அரசியல்வாதியும் வாய் திறக்கவில்லை. கர்நாடகா தங்கள் அணைகளை காப்பாற்ற உபரி நீரை திறந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியை வடிகாலாகத் தான் பயன்படுத்தி வருகிறது.
கர்நாடகா - தமிழகம்னு ரெண்டு மாநிலங்களிலும், 'இண்டியா' கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருந்தும், தமிழகத்தின் உரிமைகள் பறிபோவதை தடுக்க முடியலையே!
மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பேச்சு: தமிழர்களின் பெருமை, பாரம்பரியம், பண்பாட்டை உலகம் முழுதும் பிரதமர் மோடி கொண்டு செல்கிறார். தமிழர்கள் மீது தனிப்பட்ட முறையில் பற்று கொண்டு, செங்கோலை பார்லிமென்டில் நிறுவி பெருமை சேர்த்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு பிரச்னை வந்தபோது, அதை மீட்டுத் தந்தவர் பிரதமர் மோடி. தமிழ் பண்பாட்டை காப்பதற்காக, அனைத்து பணிகளையும் செய்து வருகிறார்.
எல்லாத்தையும் செய்யுற மோடி, மதுரை, 'எய்ம்ஸ்' மருத்துவக் கல்லுாரியையும் சீக்கிரம் கட்டித் தர நடவடிக்கை எடுக்கலாமே!