PUBLISHED ON : பிப் 04, 2025 12:00 AM

உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து பேட்டி:
ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு,
மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வரி விலக்கு
அறிவிப்புகள் ஏழைகளுக்கு நன்மை பயக்கும். விதை நேர்த்தி, விவசாய
அபிவிருத்தி திட்டங்களுக்கான அறிவிப்புகளை வரவேற்கிறோம். நீண்ட
கால விவசாயிகளின் எதிர்பார்ப்பான விளை பொருட்களுக்கு விலை
நிர்ணயம் இல்லாதது, கடன் நிவாரணம், நதிநீர் இணைப்பு உள்ளிட்டவை
குறித்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் பேச்சு: இந்தியாவிலேயே வியக்க வைக்கும் அளவிற்கு விளையாட்டுத் துறையை முன்னேற்றி, மாணவர்களை இளமைப் பொலிவோடு வைத்துள்ளார் துணை முதல்வர் உதயநிதி. அடிப்படை கல்வி பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கி, இந்தியாவில் உள்ள முதல்வர்களுக்கு ரோல் மாடலாக விளங்குகிறார் ஸ்டாலின்.
எங்களை போன்ற அமைச்சர்கள் எல்லாம், 'டம்மி'கள்தான்... முதல்வரும், துணை முதல்வரும் தான் அரசாங்கத்தை அச்சாணியாக இருந்து நடத்துறாங்கன்னு சொல்றாரோ?
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: நாடு முழுதும் அரசு பள்ளி மாணவ - மாணவியரிடம் நடத்தப்பட்ட நேரடி ஆய்வில், மஹாராஷ்டிரா, உ.பி., பஞ்சாப், கேரளா உள்ளிட்ட மாநிலங்களை விட, தமிழகத்தின் கல்வித்தரம் அதலபாதாளத்திற்கு சென்றிருப்பது உறுதியாகிறது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது, நடப்பாண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.
உ.பி.,க்கு கீழ நாம இருக்கிறோம் என்பது, கண்டிப்பா பெருமைக்குரிய விஷயம் அல்ல!
வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: ஜனாதிபதி உரையில் உள்ள தகவல்களில் பெரும்பாலானவை, கடந்த ஆண்டு உரையில் இடம் பெற்ற பழைய தகவல்களாகவே உள்ளன. மருத்துவ கல்விக் கட்டணம் குறைப்பு, வேலை வாய்ப்பை உருவாக்குதல் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டங்கள் இல்லை. மொத்தத்தில் ஜனாதிபதி உரை, நம்பிக்கை ஏதுமில்லாத, மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் பகட்டு உரையாகவே உள்ளது.
இந்த அறிக்கையின் ஒரு பிரதியை, சோனியா, ராகுலுக்கு அனுப்பியிருப்பாரே!

