PUBLISHED ON : பிப் 10, 2025 12:00 AM

தமிழக, உயர் கல்வி துறை அமைச்சர், கோவி.செழியன் பேட்டி:
மாநில
கவர்னருக்கு என சில வரைமுறைகள், அளவுகோல்கள், நெறிமுறைகள் உண்டு. அதை
தற்போதைய கவர்னர் மீறிய நேரத்தில் தான், சுப்ரீம் கோர்ட்டை நாட வேண்டிய
நிலை ஏற்பட்டது. தமிழக கவர்னருக்கு கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறைகள்,
வரைமுறைகள் மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில், சுப்ரீம்
கோர்ட்டின் கதவை தட்டிய, ஒரே ஜனநாயக போராளி, தமிழக முதல்வர் ஸ்டாலின்
மட்டுமே.
முதல்வரையும், கவர்னரையும், காபி குடித்தபடியே பேசி பார்க்கச் சொன்ன சுப்ரீம் கோர்ட்டின் யோசனையை முதல்வர் ஏத்துக்காதது ஏன்?
தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் பேட்டி:
ரேஷன் கடைகளுக்கென தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், மார்ச் 7ம் தேதி சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவங்களும் வருஷம் தவறாம போராடுறதும், அரசு கண்டுக்காம இருப்பதும் வாடிக்கையா போயிடுச்சு!
தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சியின் மாநில செயலர், மீனா ஞானசேகரன் அறிக்கை:
'மங்கையராய் பிறக்க மாதவம் செய்திட வேண்டும்' என்ற நிலை, இன்று, 'பெண்ணாக பிறத்தலே பாவம்' என, தடம் புரண்டு விட்டதோ... போதை இல்லா தமிழகத்தை உருவாக்க உறுதி கொண்டிருப்பதாக கூறும் முதல்வர் ஸ்டாலின், குற்றங்களுக்கு ஊற்று கண்ணாய் விளங்கும் மது வணிகம், போதை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
'டாஸ்மாக்' மது பானங்கள் எல்லாம், அவங்க கணக்கில் போதைப் பொருள் கிடையாது!
கோவை தெற்கு தொகுதி, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேட்டி:
பல்கலை மானியக் குழுவின் புதிய வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில், தி.மு.க., நடத்திய போராட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், 'யு.ஜி.சி., வரைவு நெறிமுறைகள் வெறும் கல்வி சார்ந்த நகர்வல்ல; அது, தமிழகத்தின் வளமான மரபின் மீதும், இந்திய கூட்டாட்சி அடிப்படை மீதும் தொடுக்கப்படும் தாக்குதல்' என, தெரிவித்து உள்ளார்.
தி.மு.க.,வின் பிரிவினை சித்தாந்தத்தை முன்மொழியும் ராகுல், தேசிய கட்சியான காங்கிரசை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பது பேரபாயம்.
இந்த மாதிரி விமர்சனங்கள் வரும்னு தானே, காங்., தேசிய தலைவர் பொறுப்பில் மல்லிகார்ஜுன கார்கேவை உட்கார வச்சிருக்காங்க!

