PUBLISHED ON : பிப் 13, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை:
ஆவடி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், '2026 சட்டசபை
தேர்தல் வரை, கவர்னர் ரவியும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும்,
அவரவர் பதவியில் நீடிக்க வேண்டும். அப்போது தான் பிரசாரமே
செய்யாமல், தி.மு.க., ஆட்சிக்கு வர முடியும்' என கூறி உள்ளார்.
அண்ணாமலை ஜுரம் அவரை ஆட்டி படைக்கிறது. அதனால் தான் அண்ணாமலை
குறித்து பதற்றத்துடன் பேசி உள்ளார்.
புரட்சி பாரதம் கட்சி தலைவரான ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ., பேட்டி: தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளன. பட்டியல் இன மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதை கண்டித்து, 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,விற்கு எதிராக புரட்சி பாரதம் கட்சி பிரசாரம் மேற்கொள்ளும்.
இவரது பிரசாரத்துக்கு எதிராக, தி.மு.க., வியூகம் வகுக்காமஅசால்டா இருந்துட்டா, ஆட்சியையே மாத்திடுவார் போலிருக்கே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: 'தமிழகத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது' என்ற தேசிய மகளிர் ஆணையத்தின் கருத்தும், 'பட்டியலின மக்களின் மீதான தாக்குதல், 45 சதவீதம் அதிகரித்துள்ளது' என்ற ஆய்வறிக்கை தகவலும், அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கின்றன. இது, ஆட்சியாளர்களின் தலையில் விழுந்த குட்டு. இனியாவது ஆளும் அரசு விழித்துக் கொண்டு, பெண்களின் பாதுகாப்பையும், பட்டியலின மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.
நடவடிக்கையை தீவிரப்படுத்திட்டா, அ.தி.மு.க.,வால அடுத்து ஆட்சிக்கு வர முடியாதுன்னு இவருக்கு தெரியாதா?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: அரை நுாற்றாண்டு காலத்துக்கு மேலாக நாட்டை ஆட்சி செய்த காங்கிரசுக்கு டில்லியில் ஏற்பட்டுள்ள பேரழிவு, 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த அ.தி.மு.க.,வுக்கும் ஏற்படும் என்ற அபாயத்தை தவிர்க்க வேண்டுமானால், அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும். அது நடந்தால் மட்டுமே, அ.தி.மு.க.,வால் தி.மு.க.,வை எதிர் கொள்வதற்கு ஏதுவான கூட்டணியை அமைக்க முடியும்.
தி.மு.க., என்ற அபாயத்தை விட, பன்னீர்செல்வத்தை தானே பெரிய அபாயமா பழனிசாமி பார்க்கிறாரு!

