PUBLISHED ON : பிப் 15, 2025 12:00 AM

தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு: பழனிசாமி
தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியில், வியாபாரிகளுக்கு பல்வேறு
இடைஞ்சல்கள்கொடுக்கப்பட்டன. இரவு 9:30க்குள், அனைத்து கடைகளையும்
அடைக்கச் சொல்லி, காவல் துறையினர் பொருட்களை வெளியே வீசிய சம்பவங்களும்
நடந்தன. ஆனால், 'தி.மு.க., ஆட்சியில் இரவு 12:00 மணி வரை வியாபாரம்
செய்யலாம். வியாபாரிகளுக்கு யாரும் இடைஞ்சல் செய்யக் கூடாது' என,
முதல்வர் ஸ்டாலின் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார்.
மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் அறிக்கை: மத்திய அரசின், 'சமக்ர சிக் ஷா அபியான்' திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய தமிழகத்திற்கான கல்வி நிதி, 2,152 கோடி ரூபாயை மத்திய அரசு மறுத்திருக்கிறது. மத்திய அரசின் நிபந்தனையை ஏற்கவில்லை என்பதற்காக, தமிழகத்திற்கு உரிய நிதியை மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்திருக்கும் மத்திய அரசின் போக்கு, மிகுந்த கண்டனத்துக்குரியது.
'டாஸ்மாக்' மூலம் கிடைக்கும் 50,000 கோடி ரூபாயில் இந்த 2,000 சொச்சம் கோடி நிதியை தமிழக அரசால் ஈடு செய்துட முடியாதா என்ன?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி: தி.மு.க., அறிவித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 328 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் பொய் சொல்கிறார். 'காலியாக உள்ள 3.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். மாணவர்களின் கல்விக்கடன், நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' உள்ளிட்ட முக்கியமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து, தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நிறைவேற்றப்படாத மீதமிருக்கும், 177 வாக்குறுதிகளில் டாக்டர் சொல்றதெல்லாம் அடங்கிடுமே!
அ.தி.மு.க., முன்னாள் பிரமுகர் பெங்களூரு புகழேந்தி பேட்டி: தேர்தல் ஆணையத்தின் முடிவு தனக்கு எதிராக வரும் என்பதால்தான் நீதிமன்றத்தில் பழனிசாமி தடை பெற்றிருந்தார்.அவர் அ.தி.மு.க., பொதுச்செயலரே இல்லை. இரட்டை இலை சின்னம் தொடர்பாக, இனி தேர்தல் கமிஷனே முடிவு செய்யும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இனி, தேர்தல் ஆணையத்தை நாடி செல்வோம்.
'மஹாராஷ்டிராவில் சரத் பவார் கட்சி, அஜித் பவாருக்கு தான் சொந்தம்' என்று தேர்தல் கமிஷன் கூறியது போல, இவரது வழக்கிலும் நடக்குமான்னு எதிர்பார்க்கிறாரோ?

