PUBLISHED ON : பிப் 16, 2025 12:00 AM

வி.சி., கட்சித்தலைவர் திருமாவளவன் அறிக்கை
மக்கள் தொகை கணக்கெடுப்பு,2021 ம் ஆண்டிலேயே துவங்கி யிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அப்பணிகள் தள்ளிப்போனது என்றாலும் , அதை துவங்குவதற்கான முயற்சிகள் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதே வேளையில், தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்.
'ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்தலாம்'னு பலரும் சொல்றாங்களே... முதல்வரை அடிக்கடி சந்திக்கிற திருமா, அவரிடம் இது பற்றி பேசலாமே
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., பேச்சு:
உள்ளாட்சி தேர்தல்களில், பெண்களுக்கு 50 சதவீதம் ஆட்சிப் பொறுப்பில் பங்குபெறக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. வரக்கூடிய சட்ட சபை தேர்தலில், மகளிர் அணியினர் கடுமையாக பணியாற்ற வேண்டும். அப்படி செய்தால்தான், உள்ளாட்சி தேர்தலில் உழைக்கக்கூடிய மகளிருக்கு வாய்ப்பு கேட்டு, நான் போராட முடியும்.
இவங்க பேச்சை பார்த்தால், 2026 சட்டசபை தேர்தல் முடிஞ்சுதான், உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவாங்களோ?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேச்சு:
மக்களை நம்ப முடியவில்லை. முன்பெல்லாம், கிராமங்களில் நடக்கும் ஊராட்சி தலைவர் தேர்தலில் சொந்த, பந்தங்கள் பார்த்து ஓட்டளித்தனர். இப்போது அந்த நிலை இல்லை. பணம் கொடுப்பவர்கள் தான் வெற்றி பெறுகின்றனர். பல கோடிகள் வைத்திருப்பவர்கள் தான் எம்.எல்.ஏ., தேர்தலில் நிற்க முடியும்.
இதன் வாயிலாக, 'கோடிகள் வச்சிருந்தால் மட்டும் சீட் கேளுங்க'ன்னு, கட்சியினருக்கு சொல்லாம சொல்றாரோ?
தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை:
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, முதல்வராக இருந்த போதுதான், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு, 2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அவருடைய, நான்காண்டு ஆட்சியில், 85 சதவீதப் பணிகள் நிறைவு செய்யப்பட்டன. கொரோனா காலத்திலும் ஒடிசாவில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து திட்டப்பணிகளை தொய்வில்லாமல் பழனிசாமி நடத்தினார். ஒரு உண்மையான விவசாயி, தமிழகத்தின் முதல்வராக அமர்ந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு விடிவுகாலம் என்பதை, அத்திக்கடவு திட்டத்தின் வாயிலாக பழனிசாமி நிரூபித்தார்.
எப்படியாவது ஐஸ் வச்சு, அவரை தே.ஜ., கூட்டணிக்குள்ள இழுத்துப் போட பார்ப்பது நல்லாவே தெரியுது!

