PUBLISHED ON : பிப் 17, 2025 12:00 AM

தமிழக வேளாண் துறை அமைச்சர், பன்னீர்செல்வம் பேட்டி:
நாங்கள் பேசுவது
விவசாயிகளுக்கு பயனாகிறது; திட்டங்களாகிறது. ஆனால், பா.ஜ., தலைவர் அண்ணாமலை
பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு
தேவையான நிவாரண நிதியை தமிழக அரசு கேட்டும், மத்திய அரசு வழங்காமல் வாயால்
வடை சுடுகின்றனர். அண்ணாமலை, பெயர் வெளியில் வர வேண்டும் என்பதற்காகவே
பேசுகிறார். அவர் பேசுவது, வெத்துவேட்டு என்பதை மக்கள் புரிந்து கொள்ள
வேண்டும்.
அண்ணாமலை புள்ளி விபரங்களோடு கேட்கும் கேள்விகளுக்கு பதில் தர முடியாமல், இப்படி பொத்தாம்பொதுவா புகார் சொன்னால் எப்படி?
தமிழக பொதுப்பணி துறை அமைச்சர் வேலு பேட்டி:
கூடுகிற கூட்டம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக, அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மத்திய அரசு, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்குகிறது. புதிதாக கட்சி துவங்கி யுள்ள நடிகர் விஜய்க்கு அச்சுறுத்தல் இருக்கும் என்று கருதிய மத்திய அரசு, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கியிருக்கலாம்.
விஜய், தி.மு.க.,வுக்கு எதிராகவே அரசியல் பண்றாரு... அப்படி என்றால், இவங்க தானே, அவருக்கு பெரிய அச்சுறுத்தல்!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேச்சு:
'அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தை தேர்தல் கமிஷன் விசாரிக்கலாம்' என்று ஐகோர்ட் கூறியுள்ளது. அதற்கு ஆதரவாக பேசியுள்ள, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கருத்தை வரவேற்கிறேன். உண்மையான, அ.தி.மு.க., தொண்டர்கள் செங்கோட்டையன் கருத்தை வரவேற்பர்.
'பழனிசாமி பக்கம் இருப்பவர்கள் உண்மையான, அ.தி.மு.க., வினர் இல்லை'ன்னு சொல்றாரா... அப்படி என்றால், அவரது அணியுடன் இணைய துடிப்பது ஏன்?
துாத்துக்குடி தொகுதி, தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேட்டி:
தேர்தல் வியூகர் பிரஷாந்த் கிஷோர் தற்போது, த.வெ.க., தலைவர் விஜயோடு உள்ளார். தேர்தல் வியூகம் வகுத்து தருவது பிரஷாந்த் கிஷோரின் தொழில். அவரை, யார் அழைக்கின்றனரோ அங்கு செல்கிறார். அதை பற்றி எங்களுக்கு என்ன கவலை... தொண்டர்களை நம்பி, தி.மு.க., உள்ளது; தேர்தலை சந்திக்கிறது. முதல்வர் எந்த வழியை காட்டுகிறாரோ, அந்த வழியில் செயல்பட, தி.மு.க., தலைவர்கள், தொண்டர்கள் தயாராக உள்ளனர். கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., தொண்டர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் தான், பிரஷாந்த் கிஷோரை இவங்க அழைச்சிட்டு வந்தாங்களோ?

