PUBLISHED ON : பிப் 20, 2025 12:00 AM

அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் சரவணன் அறிக்கை: 'இளைய
தலைமுறை என்னை அப்பா என, அழைப்பது ஆனந்தமாக இருக்கிறது' என்று,
முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இளைய தலைமுறைக்கு ஒரே ஆண்டில் 10
லட்சம் வேலை வாய்ப்பு என்றார். இதுவரை, 40 லட்சம் பேருக்கு வேலை
வாய்ப்பு வழங்கி உள்ளாரா? 'நீட்' தேர்வு, மாணவர்கள் கல்விக்கடன்களை
ரத்து செய்தாரா? 3.50 லட்சம் அரசு காலி பணியிடங்களை நிரப்பினாரா?
எதுவும் செய்யாமல் தன் மகனை துணை முதல்வராக்கினார்.
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: தமிழக முதல்வர் ஸ்டாலின், மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என்று பேசி இருந்தார். இரு இனக் குழுக்களுக்கு இடையேயான பிரச்னை என்பதை புரிந்து கொள்ளாமல், அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்று பேசியிருக்கிறார். மணிப்பூர் வரை பேசத் தெரிந்த முதல்வருக்கு, மயிலாடுதுறை பற்றி பேச ஏன் மனம் வரவில்லை?
காரணம் சிம்பிள்... மணிப்பூரில் நடப்பது பா.ஜ., ஆட்சி... மாநிலத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி!
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி அறிக்கை: டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 18க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற பெருந்திரள் மக்கள் கூடும் விழாக்களை நடத்தும்போது, உரிய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகளை செய்துதர வேண்டியது அரசின் கடமை.
போன வருஷம் சென்னையில் நடந்த, 'ஏர் ஷோ' கூட்ட நெரிசல்ல சிக்கி, ஆறு பேர் பலியானதை இவங்க மறந்துட்டாங்களோ?
தமிழக பா.ஜ., விவசாய அணி செயலர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை: தெருநாய்கள், நாய்கள் கட்டுப்பாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கிய 1,100 கோடி ரூபாய் கருத்தடைக்கு கணக்கு காட்டப்பட்டாலும், நாய்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
நாய்களுக்கு 1,100 கோடி ரூபாயில் கருத்தடை பண்ணியிருக்காங்களா... அது சரி... 'அந்த நாய்களா வந்து நாளைக்கு சாட்சி சொல்லப் போகுது'ன்னு நினைச்சுட்டாங்களோ?
தி.மு.க., மருத்துவ அணி செயலரான, சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ., எழிலன்: சமூக நலத்திட்டங்கள் காரணமாகத்தான் தமிழக மக்கள் அனைவரும் பொருளாதாரத்தில் உயர்ந்து, தனிநபரின் ஆண்டு வருமானம் உயர்ந்துள்ளது.
சமூக நலத் திட்டங்கள் அனைத்தும், இலவசமாய் கிடைக்குது. அப்படி இருக்கும்போது, காசு சம்பாதிக்கும் எண்ணமே மக்களுக்கு போயிடுமே... எப்படி பொருளாதார நிலை உயரும்?

