PUBLISHED ON : ஜன 03, 2024 12:00 AM

த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: பொங்கல் தொகுப்பில், 1,500
ரூபாய், முழு கரும்பு ஒன்று அவசியம் இடம் பெற வேண்டும். கரும்பை கட்டாயமாக
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். பொங்கல்
தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமான, பயனுள்ள வகையில் இருப்பதை முன்னதாகவே,
தமிழக அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும்.
உரிமைத் தொகை, வெள்ள நிவாரணம்னு வாரி வழங்கி, கஜானா காலியாகி இருக்கே... பொங்கல் தொகுப்புல இவர் கேட்பது இருக்குமா?
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: எச்.ஐ.வி., தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முதலிடம் பிடித்ததற்காக, மத்திய அரசிடம் இருந்து விருது கிடைத்துள்ளதாகவும், தமிழக முதல்வரிடம் விரைவில் விருது சமர்ப்பிக்கப்படும் என்றும் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அப்போது, அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கையை முதல்வரிடம் தெரிவித்து நிறைவேற்றினால், நாங்கள் இன்னும் உற்சாகமாக பணி செய்ய வழிவகுக்கும்.
விருதை காண்பித்து முதல்வரை மகிழ்ச்சிப்படுத்தும் நேரத்துல, டாக்டர்கள் சம்பள விவகாரத்தை பற்றி பேசி அவரை கடுப்பாக்க அமைச்சர் முன்வரவே மாட்டார்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: 'போக்குவரத்து பணியாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம், அனைத்து போக்குவரத்து தொழிலாளர்களும் பயனடையும் வகையில், மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில், இக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. முதல்வர் இதில் தலையிட்டு, தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்.
அரசுக்கு இருக்கிற நிதி நெருக்கடியில், போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது கஷ்டம் தான்... வேணும்னா பேச்சு நடத்தி மழுப்பி அனுப்புவாங்க!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 100 கோடி ரூபாய் செலவழித்து, குளங்கள், குட்டைகள், கால்வாய்கள், ஆறுகளை துார் வாரி, முறையாக நிர்வகித்திருந்தாலே, தென் மாவட்ட மக்கள் துயர நிலைக்கு சென்றிருக்க மாட்டார்கள்.
பேரிடர் ஏற்படுத்திய துயரை விட, மீட்பு, நிவாரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் போடும் சண்டை தான் மக்களுக்கு பெரிய துயரமா இருக்கு!