PUBLISHED ON : ஜன 18, 2024 12:00 AM

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: தமிழக மீனவர்களை கைது
செய்யும் இலங்கை கடற்படையின் நடவடிக்கை, புதுக்கோட்டை மட்டுமல்ல, அனைத்து
மாவட்ட மீனவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே, இலங்கை
கடற்படையினரால், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின்
படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலங்களில்,
எவ்வித அச்சமுமின்றி மீனவர்கள், மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கு நிரந்தர
தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
கடலில் அலைகள் ஓய்ந்தாலும் ஓயும்... நம்மமீனவர்கள் துயரம் மட்டும் ஓயவே ஓயாது போலும்!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: ரேஷன் கடைகளில், எஞ்சிய கரும்பை விற்கும் பணியை ரேஷன் கடை பணியாளர்கள் தலையில் சுமத்துவது நியாயமற்றது; இது, அவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். ரேஷன் கடை பணியாளர்களின் பணி, மக்களுக்கு நுகர்பொருட்களை வழங்குவது தான். கரும்புகளை கூவி கூவி விற்பனை செய்ய சொல்வது அவர்களின் கண்ணியத்தை குறைத்து விடும். எனவே, இது தொடர்பான சுற்றறிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும்.
ஆட்சியாளர்கள் எந்த திட்டம் தீட்டினாலும், கடைசியில், அது ரேஷன் ஊழியர்கள் தலையில் தான் பணிச்சுமையாக வந்து விடியுது... அவங்க பாடு ரொம்பவே திண்டாட்டம் தான்!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: இந்தியாவில், 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வாழும் மிக அழுக்கான நகரங்களின் பட்டியலில், முதல் 10 இடங்களிலும் மேற்கு வங்க மாநில நகரங்களே உள்ளன.
அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த சாதனையை வேற எந்த மாநிலத்துக்கும் விட்டுத்தரக் கூடாதுன்னு முடிவு எடுத்திருப்பாங்களோ?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: கர்நாடகாவில், பட்டப்படிப்பை முடித்து, ஆறு மாதங்கள் வேலையில்லாமல்இருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கர்நாடக அரசு துவக்கியிருக்கிறது. டிப்ளமோ முடித்த இளைஞர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகத்திலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை இதேபோல் மாற்றியமைக்க வேண்டும்.
இவரது கட்சியின் தேர்தல் அறிக்கையில், இதுபோன்ற உதவித்தொகை திட்டத்தை அறிவித்தால், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் ஓட்டுகளை ஒட்டு மொத்தமா அள்ளிடலாமே!