PUBLISHED ON : ஜன 20, 2024 12:00 AM

தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் பேச்சு: திருவள்ளுவரையும்,
கருணாநிதியையும் பிரித்து பார்க்க முடியாது. தமிழ் இருக்கும் வரை
திருக்குறளும், திருக்குறள் இருக்கும் வரை கருணாநிதியின் புகழும்
இருக்கும். கருணாநிதியின், 14 வயதில் திருக்குறளுக்கும், அவருக்கும்
தொடர்பு ஏற்பட்டு, 80 ஆண்டுகளாக பேசியதும், எழுதியதும், வாழ்ந்ததும்,
திருக்குறளின் அடிப்படையில் தான் என்றால், அது மிகையல்ல.
குறளோவியம்
எழுதியதுடன், அரசு பஸ்களிலும் திருக்குறளை விளக்கவுரையுடன் எழுதி வச்சு,
மக்களை குறளோடு பின்னி பிணைத்தவர் கருணாநிதி என்பதில், மாற்றுக்
கருத்தில்லை!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் அறிக்கை: 'அ.தி.மு.க., மெகா கூட்டணி அமைக்கும்' என, பழனிசாமி தெரிவித்தார். ஆனால், கூட்டணிக்கு யாரும் ஆதரவுதரவில்லை. எந்த கட்சியும் அவர் கூட்டணிக்கு வரவில்லை' என, ஆளுங்கட்சியினர் சொல்கின்றனர். எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. அதனால் தான், எங்கள் கூட்டணிக்கு பெயரே மெகா கூட்டணி என, வைத்து கொள்ளுங்கள்.
மற்ற கட்சிகள் வந்து சேர்வது அப்புறமா இருக்கட்டும்... பிரிந்து கிடக்குற அ.தி.மு.க., அணிகள் ஒண்ணு சேர்ந்தாலே, அது வெற்றி கூட்டணி தான்!
தமிழக பா.ஜ., செயலர் கராத்தே தியாகராஜன் பேச்சு: அ.தி.மு.க.,வினர், 'நாங்கள் பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகி விட்டோம்' என, அறிவித்துள்ளனர். பா.ஜ., என்ன முடிவு எடுக்க போகிறது என்ற குழப்பம் வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தேர்தல் கூட்டணி குறித்து தெளிவான முடிவை மக்களும், தொண்டர்களும் எதிர்பார்க்கின்றனர்.
கூட்டணி உறுதியானால் தான், தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவுல இருப்பார் போல... அதான், இப்படி ஆதங்கப்படுறாரு!
அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை பேட்டி: பா.ஜ.,வுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்தாலும், 2009, 2014ல் தனித்து தான் போட்டியிட்டோம். அதில் முறையே, 12 மற்றும் 37 லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற்றோம். தற்போது, பா.ஜ., கூட்டணியில் இருந்தால் தான் நாங்கள் வெற்றி பெறுவோம் என, கிடையாது; அதற்கு அவசியமும் இல்லை.
இவர் சொல்வதை பார்த்தால், கிட்டத்தட்ட அ.தி.மு.க., லோக்சபா தேர்தலில் தனித்து தான் போட்டியிடும் போல தெரியுதே!