PUBLISHED ON : ஜன 22, 2024 12:00 AM

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை:
சென்னை, பல்லாவரம்
தொகுதி, தி.மு.க., -- எம்.எல்.ஏ., கருணாநிதி மகன் வீட்டில் வேலை செய்த
இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக, உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை
எடுக்க வேண்டும். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., குடும்பம் என்ற அதிகார போக்கே,
இதுபோன்ற அருவருக்கத்தக்க வன்முறை சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட காரணம்.
எம்.எல்.ஏ.,
கருணாநிதிக்கு, 'கட்டம்' சரியில்லைன்னு தான் தோணுது... எதிர்க்கட்சிகளை
விட சொந்த கட்சியில் ஆகாதவர்களே அவருக்கு இந்த விஷயத்துல குழி
பறிச்சிடுவாங்களே!
தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் பேட்டி:
தமிழகம் முழுதும் ஆயிரக்கணக்கானோர், நம் கட்சியில் இணைந்து வருகின்றனர். நாங்கள், தி.மு.க., கூட்டணியில் பயணிக்கிறோம். லோக்சபா தேர்தலில் எங்களுக்கான உரிய இடத்தை கேட்போம். தமிழகத்தில் அழிந்து வந்த, பா.ம.க.,விற்கு, 'பென்னாகரம் பார்முலா'வால் உயிர் பிச்சை கொடுத்தது நான் தான்.
அதெல்லாம் இருக்கட்டும்... பா.ம.க., கூட்டணிக்குள் வந்துட்டா, தி.மு.க.,வில் உங்களுக்கு இடம் இருக்குமான்னு உறுதியா சொல்ல முடியுமா?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில், ஓ.பி.சி.,க்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான, 'கிரிமீலேயர்' வருமான வரம்பு, 8 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகளாகி விட்டன.
கிரீமி லேயர் வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதை பரிசீலிக்க கூட மத்திய அரசு முன்வராதது, ஓ.பி.சி., வகுப்பினரை மன உளைச்சலில் ஆழ்த்திஉள்ளது.
தான் சார்ந்துள்ள, எம்.பி.சி., பிரிவுக்கு மட்டுமல்ல, ஓ.பி.சி.,க்காகவும், பா.ம.க., குரல் கொடுக்கும்னு அன்புமணி சொல்றாரா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:
விமானங்களுக்கு பயண கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படுவதில்லை என்றும், கடைசி நேரத்தில் பயணித்தால், கட்டணம் கூடுதலாக தான் இருக்கும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
விசேஷ காலங்களில், கூடுதல் விமானங்களை இயக்க வேண்டுமே தவிர, கூடுதல் கட்டணம் ஏற்புடையதல்ல. சேவைத்துறை, சுரண்டும் துறையாக ஆகி விடக்கூடாது.
பயணிகளே இல்லாம ஈயாடும் போது, ஆயிரம், ரெண்டாயிரத்துக்கு விமானத்துல பறக்க டிக்கெட் தர்றாங்களே... அந்த நஷ்டத்தை எப்படி தான் சமாளிப்பாங்களாம்!