PUBLISHED ON : பிப் 04, 2024 12:00 AM

அகில இந்திய காங்கிரஸ் செயலரும், முன்னாள் எம்.பி.,யுமான விஸ்வநாதன் பேச்சு:
நாடு
முழுதும் 10,000 கி.மீ., யாத்திரையை ராகுல் மேற்கொள்கிறார். பல்வேறு சமூக
மக்களை ஒரு குடையின் கீழ் இணைக்கும் வகையில், இந்த யாத்திரை அமைந்துள்ளது.
மார்ச்சில் மும்பையில் ராகுலின் யாத்திரை நிறைவு விழா, லோக்சபா தேர்தல்
வெற்றியை எதிரொலிக்கும் விழாவாக அமையும்.
அது சரி... பீஹாருக்குள்ள
ராகுல் நுழையுறதுக்கு முன்னாடியே, நிதீஷ் வெளியே போயிட்டார்... மும்பையில்
நிறைவு விழாவுக்கு முன் இன்னும் யார் யார் கூட்டணியில் இருந்து ஓட்டம்
பிடிப்பாங்களோ?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேச்சு: தனக்கு பதவி கொடுத்தவர்களுக்கு துரோகம் செய்தவர் பழனிசாமி. அவரது தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும், அ.தி.மு.க., படுதோல்வி அடைந்துள்ளது. வரும் லோக்சபா தேர்தலிலும், பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., படுதோல்வி அடையும். தொண்டர்கள், அ.தி.மு.க.,வையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்க, ஓரணியில் திரள வேண்டும்.
தன் உள்ளக்குமுறலை இப்படி வெளிப்படுத்துறாரே... இவர் சாபத்தில் இருந்து தப்பிக்கவே, பழனிசாமி நான்கைந்து யாகம் நடத்தணும் போலிருக்கே!
மா.கம்யூ., மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: கவர்னர் ரவி, வெண்மணி தியாகிகளை குறி வைக்கிறார். 'படுகொலை செய்யப்பட்ட, 44 ஏழை கூலி தொழிலாளர்களை நினைவுகூரும் வகையில், விலையுர்ந்த கான்கிரீட் கட்டுமானம் ஒரு நினைவு சின்னமாக அமைந்திருப்பது, தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம்' என, கவர்னர் ரவி அழுதிருக்கிறார். வெண்மணி தியாக நெருப்புக்கு அழுக்கு பூசுவதற்கு கவர்னர் ரவி நினைக்கிறார்.
ஒரு காலத்துல, இந்த மாதிரி அரசுக்கு எதிரான குறைகளை காம்ரேட்கள் தான் சுட்டிக்காட்டுவர்... இப்ப, யாராச்சும் அரசை குறை சொன்னா கூட இவங்களுக்கு கோபம் வருது!
பா.ஜ., மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் பேட்டி: அண்ணாமலையின், 'என் மண் என் மக்கள்' யாத்திரை மக்களை கவர்ந்துள்ளது. மோடி மீண்டும் பிரதமர் ஆவார். தேசிய அளவில் 400 தொகுதிகளுக்கு மேலும், தமிழகத்தில், 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவது மட்டுமே எங்கள் இலக்கு.
தமிழகத்துலயே பா.ஜ., 25 தொகுதிகளில் ஜெயிச்சுட்டா, தேசிய அளவில் 400 என்ன, 450 தொகுதியே கிடைச்சிடும் போங்க!