PUBLISHED ON : பிப் 12, 2024 12:00 AM

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்:
பெரம்பலுார்,
மயிலாடுதுறை உட்பட ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லுாரி அமைக்க,
முதல்வர் ஸ்டாலினும், நானும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம்.
இது புரியாமல், பா.ம.க., தலைவர் அன்புமணி பேசுகிறார். பா.ஜ.,விடம்
நெருக்கமாக உள்ள அவர், மத்திய அரசிடம் பேசி, மருத்துவக் கல்லுாரிகளை பெற்று
தர வேண்டும்.
கொஞ்சம் பொறுங்க... அவர் இந்த முறை, எம்.பி.,யாகி, மத்திய அமைச்சரும் ஆகிடணும்னு முடிவா இருக்காரு... அப்புறம் பேசுவார் பாருங்க!
தமிழக, பா.ஜ., பொருளாளர், எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: தமிழகத்தில் சில மாவட்டங்கள் அள்ளி கொடுக்கும் வருவாயில் தான், ஒட்டுமொத்த தமிழகமும் இயங்குகிறது. அள்ளி கொடுக்கும் மாவட்டமும், நொடிந்து போன மாவட்டங்களும் சேர்ந்த கலவை தான் மாநிலம். சென்னை மாவட்டமும், அரியலுார் மாவட்டமும், ஒரே அளவு வருவாயை ஈட்டித் தருகிறதா; கோவையும், ராமநாதபுரமும் ஒரே அளவு நிதி ஒதுக்கீட்டை, தமிழக அரசிடம் பெறுகின்றனவா?
'யார் கிட்ட கேட்குற... கேளு கேளு'ன்னு சொல்லிட்டு, 'நயா பைசா இல்ல'ன்னு, நடிகர் வடிவேலு ஒரு படத்துல, 'காமெடி' பண்ற மாதிரி இல்ல, மத்திய அரசு தமிழக அரசிடம் நடந்துக்குது!
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: அன்று, அரசு மருத்துவர்களின் போராட்டத்தை முன்னெடுத்து சென்ற, டாக்டர் லட்சுமி நரசிம்மன் மன உளைச்சலால் உயிரிழந்த போது, 'அ.தி.மு.க., அரசை, மருத்துவர் சமுதாயம் என்றைக்கும் மன்னிக்காது' என, இன்றைய முதல்வர் ஸ்டாலின் கூறினார். இன்று அவரே ஆட்சியில் இருக்கிறார்; மருத்துவர்களின் ஒரு கோரிக்கையும் நிறைவேற்றவில்லை.
'தலைவலியும், வயிற்று வலியும் தனக்கு வந்தா தானே தெரியும்'னு கிராமத்துல பழமொழி சொல்ற மாதிரி, இப்ப தான் அன்றைய ஆளுங்கட்சியினர் நிலைமை முதல்வருக்கு புரிஞ்சிருக்கோ என்னமோ?
தமிழக, பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: கோவைக்கு செல்லும் சிறுவாணி நீர் அளவை, 50 சதவீதம் குறைத்து, கோவை தமிழர்களுக்கு குடிநீரை தடை செய்யும் கேரள அரசை கண்டிக்க துப்பில்லாமல், தமிழர்களை வஞ்சிக்கும் அந்த மாநில அரசுடன் இணைந்து, மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு போராட்டம் நடத்த முடிவெடுத்திருப்பது வெட்கக்கேடு, துரோகம்.
அதுக்கென்ன செய்ய முடியும்... 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற கோட்பாட்டை திராவிட மாடல் ஆட்சியாளர்கள் பின்பற்றுறாங்க!

