PUBLISHED ON : பிப் 16, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை:
'பொங்கல்
பை வாங்குனதுல ஊழல்;தீபாவளி ஸ்வீட் வாங்கியதில் ஊழல்' என்ற பழனிசாமி,
தி.மு.க., ஆட்சி மீது எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில், எந்த
வழக்கும் போடலை. 'ஆட்சிக்கு வந்ததும், பழனிசாமி மற்றும் அவரது சகாக்கள்
மீதான ஊழல் வழக்குகளை விசாரித்து, சிறைக்கு அனுப்புவோம்' என ஆட்சிக்கு
வருவதற்கு முன்பு கூறிய, விடியல் கம்பெனி மவுன விரதம் இருக்கு. ஆளும்
கட்சி, எதிர்க்கட்சி ஒன்றோடு ஒன்றாக இருக்கின்றன.
சட்டசபையில, இவரது தலைவர் இருக்கையை, முதல்வர் சிபாரிசுப்படி மாத்திட்ட கடுப்பு, 'பளிச்'னு தெரியுதே!
புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை: கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டு 40 நாட்களுக்குப் பிறகும், அங்கு வந்து செல்ல போதிய பஸ் வசதிகள் இல்லை. இதனால், பயணியரே சாலை மறியலில் ஈடுபடும் அளவுக்கு நிலை உருவாகியுள்ளது. இப்படி அதிருப்தி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது நல்லதல்ல.
கண்டிப்பாக... இந்த சம்பவங்கள், லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் மாற்று கருத்தே இல்லை!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும், அ.தி.மு.க., மக்களுக்கு உதவி செய்யக்கூடிய இயக்கம். சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில், எங்களின் தொடர் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. சபாநாயகரிடம் முதல்வர் பரிசீலனை செய்யும்படி தெரிவித்தவுடன் இந்த மாற்றம் நடந்துள்ளது.
'முதல்வர் சொன்னால் தான் சபாநாயகர் கேட்கிறார்' என்பதை நாசுக்கா குத்திக் காட்டுறாரோ?
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: மீண்டும் ஆவின் அட்டை வழங்குவதில் கெடுபிடி. சில மாதங்களுக்கு முன்பு, நுகர்வோர் ஒரு முறை நேரில் வந்து, தங்களின் அடையாளத்தை உறுதி செய்தால் தான் அட்டை வழங்க முடியும் என்று கட்டாயப்படுத்தினர். நேரில் சென்று பெற்றுக் கொண்ட நிலையில், மீண்டும் நேரில் வந்து, அடையாள அட்டையை காண்பித்து, பெற்றுக் கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து பொது மக்களை அவதிக்குள்ளாக்குவது, ஆவின் நிர்வாகத்தின் அநியாய செயல்பாடு.
இப்படி, 'படுத்தி' எடுத்தால் தான், ஆவின் அட்டையே வேண்டாம்னு பொதுமக்கள் ஓட்டம் பிடிப்பாங்கன்னு மாத்தி யோசிக்கிறாங்களோ?