PUBLISHED ON : மார் 02, 2024 12:00 AM

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம்,
பரந்துார் விமான நிலையத்திற்கு, நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு
தெரிவித்து போராடிய பொதுமக்களை கைது செய்திருக்கும் காவல்துறையின்
நடவடிக்கை, கண்டனத்துக்கு உரியது. விளை நிலங்களையும், நீர் நிலைகளையும்
அழிக்கும் நோக்கில் அமைய உள்ள, பரந்துார் விமான நிலைய திட்டத்தை, தமிழக
அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
அதே மாவட்டம், படப்பையில் 200
ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆளும் கூட்டணி கட்சி பிரமுகர்கள் கூறு
போட்டு விற்குறாங்க... இவங்க விவசாய நிலத்தை எடுக்குறாங்க... எல்லாம்
கொடுமை!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: ஆளும் தி.மு.க.,வுக்கு எதிராக அலையடிக்கும் மக்களின் கோபம், லோக்சபா தேர்தலில் ஒருமுகப்படுத்தப்பட்டால், அது தங்களுக்கு பெரும் பின்னடைவை உருவாக்கும் என்பதால், டில்லி சென்று மோடியின் வலப்பக்கம் உட்கார்ந்த பழனிசாமியை, வழக்குகளை காட்டி மிரட்டி, தி.மு.க., மூன்றாவது அணி அமைக்க வைத்திருக்கிறது.
சரி அதெல்லாம் இருக்கட்டும்... பல்லடத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில், பல கட்சிகளின் தலைவர்கள் மேடை ஏறினாங் களே... பன்னீர்செல்வம் எங்கே போனார்?
மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: தமிழகத்தில் தொடரும் ஜாதி ஆணவ கொலைகளை தடுத்து நிறுத்த பொது சமூகம் முன்வர வேண்டும். ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பு இல்லங்களை அரசு அமைக்க வேண்டும். ஆணவ கொலைகளில் ஈடுபடுவோர் உரிய தண்டனை பெற, வழக்கு விசாரணையை குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும்.
தோழர் கோரிக்கையா வைக்குறாரு... இதே தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி மட்டும் நடக்காம இருந்திருந்தா, போராட வீதிக்கு வந்திருப்பாங்க!
மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் பேட்டி: தமிழகம் முழுதும் கஞ்சா நடமாட்டம் அதிகரித் துள்ளது. தி.மு.க., நிர்வாகியே, 3,000 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தலில் சிக்கியுள்ளார். போதை பொருள் கடத்தலுக்கு தி.மு.க., பாதுகாப்பாக உள்ளது. இவரது தொடர்பு குறித்து, ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.
கட்சியில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் என்ன தொழில் பண்றாங்கன்னு தலைவர் விசாரிச்சிட்டா இருக்க முடியும்... தவறுன்னு தெரிஞ்சதும் கட்சியை விட்டு துாக்கிட்டாங்களே... அப்புறம் என்ன?

