PUBLISHED ON : மார் 03, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை:
ஒரு
நாள் மனம் வருந்தி, எல்லாரும் கரம் கோர்க்கும் காலம் வரலாம். ஆனால், அன்று
களம் நம்மை விட்டு கடந்து போயிருக்கும். ஆம்... காற்றில் பறந்து விட்டதை,
மீண்டும் கூட்டி சேர்க்க முடியாதே.
உண்மை தான்... கட்சியை முழுசா
கட்டுப்பாட்டில் எடுத்துட்ட பழனிசாமி தலைமையை ஏற்று, 'ஈகோ' பார்க்காமல்,
பிரிந்து சென்றவர்கள் சேர்ந்தால், இவர் நினைப்பது சாத்தியம்!
மா.கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை: தமிழக மக்கள் புத்திசாலிகள் என, பிரதமர் சான்றிதழ் வழங்கியுள்ளார். அவர் கூறுவது உண்மை தான். அதனால் தான் தமிழகம் எப்போதும் பா.ஜ.,வை நிராகரித்து, மதச்சார்பின்மை பக்கமே நின்று கொண்டிருக்கிறது. 'அண்ணாமலை யாத்திரையால், 'இண்டியா' கூட்டணிக்கு பூட்டு போடப்படும்' என, பிரதமர் கூறியுள்ளார். வரும் தேர்தலில் பா.ஜ.,வையும், அதோடு கூட்டணி சேரும் கட்சிகளையும், தமிழக மக்கள் துடைத்தெறிவர் என்பது நிச்சயம்.
அப்ப கூட, 'இண்டியா கூட்டணி நாடு முழுதும் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்கும்'னு சொல்ல மாட்டேங்கிறாரே!
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: பணியின் போது இறந்த அரசு டாக்டர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவதாக, சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், மக்கள் உயிரை காப்பாற்ற போராடி மாண்ட மருத்துவர் விவேகானந்தன் குடும்பம் மட்டும் நினைவுக்கு வராதது ஏனோ?
கொரோனா பேரிடரில் பணியாற்றி, உயிர் நீத்த மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு பணி வழங்காமல் இழுத்தடிப்பது, பெருங்கொடுமை!
தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி: சில தினங்களுக்கு முன், பிரதமர் மோடி துவங்கி வைத்த ஐந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் மத்திய அரசு நிதியில் கட்டப்பட்டது. தமிழ கத்தில், மதுரையில் மட்டும் தான் ஜப்பான் கூட்டுறவு முகமை கடனில் கட்டப்படுகிறது. இம்மருத்துவமனை கட்டுமானம் 2024 இறுதியில் துவங்கி, 2028ல் முடியும்.
விடுங்க... மத்திய அரசு மட்டும் அப்பவே நிதி ஒதுக்கி, கட்டடத்தை கட்டியிருந்தால், செங்கல்லை வைத்து பிரசாரம் செஞ்சு ஆட்சியை பிடிச்சிருக்க முடியுமா?

