PUBLISHED ON : மார் 10, 2024 12:00 AM

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேட்டி: லோக்சபா
தேர்தலில் பணம், டோக்கன், பரிசு பொருட்கள் வழங்கினால், 'சி - விஜில்'
மொபைல் செயலியில் போட்டோ அல்லது வீடியோ எடுத்து, பொதுமக்கள் ஆதாரம்
அனுப்பினால், 100 நிமிடங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
காசு
கொடுக்கிறதை போட்டோ, வீடியோ எடுத்தா, அடுத்த நிமிஷமே கட்சிக்காரங்க
பொளந்து கட்டிருவாங்களே... இவங்க, 100 நிமிஷத்துல வருவாங்களாம்!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: மத்திய அரசிடம்நிவாரணமாக, 37,000 கோடி ரூபாய் கேட்டு தராத நிலையிலும், 3,407 கோடி ரூபாய் மாநில அரசு நிவாரணம் வழங்கியதாக முதல்வர் சொல்கிறார். இதில், மத்திய அரசு, மாநில பேரிடர் நிவாரண பங்கான, 900 கோடி ரூபாய், வெள்ள மேலாண்மை நிதியாக, 561 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. முதல்வர் நிவாரண நிதி உட்பட சி.பி.சி.எல்., நிறுவனம் அளித்த தொகையும் இதில் அடங்கும் தானே.
தமிழக அரசு கேட்ட 37,000 கோடி எங்கே... இவர் சொல்ற 900 பிளஸ் 561 கோடி எங்கே... யானைப் பசிக்கு சோளப் பொரி போதுமா?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: கோடநாடு வழக்கு திட்டமிட்டு இழுத்தடிக்கப்படுவது தெளிவாக தெரிகிறது. கொலை, கொள்ளை சம்பவத்தில் சந்தேகிக்கப்படுவோர், ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களாகவும், இவ்வழக்கில் ஆதாரங்களை அழித்து நீர்த்து போக செய்ததில், அப்போதிருந்த காவல் துறையினர் பலருக்கும் பங்கிருப்பதாக சந்தேகிக்கப்படும் வேளையில், வழக்கை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றுவதோடு, சி.பி.ஐ., விசாரிப்பதே சிறப்பாகும்.
அ.தி.மு.க., கடைசி வரை கூட்டணிக்கு வராமல், மீண்டும் பா.ஜ., மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இவர் கேட்பது நிச்சயம் நடக்கும்!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: ஒரு காலத்தில் உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலையில் இருந்த பெண்களுக்கு இப்போது ஓரளவு உரிமைகளும், விடுதலையும் கிடைத்திருந்தாலும் கூட இன்னும் பாதுகாப்பு கிடைக்கவில்லை. புதுச்சேரியில், 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட நிகழ்வு, இதற்கு வலி மிகுந்த ஒரு எடுத்துக்காட்டு.
இந்த மாதிரி சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமே, போதை பொருட்கள் தான் என, நீங்கள் அடிக்கடி சொல்வதை, அரசு என்றைக்கு தான் காது கொடுத்து கேட்கும்?

