PUBLISHED ON : மார் 14, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'தி.மு.க.,வை
ஒழித்து விடுவேன் என பிரதமர் கூறியுள்ளார். நான் அமைச்சராக இருப்பதால்
பார்க்கிறேன். இல்லையெனில் பீஸ் பீஸாக்கி விடுவேன்' என, அமைச்சர் அன்பரசன்
கூறியுள்ளார். ரவுடிகளாக இருந்திருக்க வேண்டி யவர்கள், அமைச்சர்களானால்
பிரதமரை பீஸ் பீஸாக்கி விடுவேன் என்று சொல்வதில் வியப்பில்லை. ஆனால், ஒரு
முன்னாள் பிரதமரை, அதே தொகுதியில் இப்படி ஆக்கியதை நினைவுபடுத்தி, பிரதமரை
மிரட்டுகிறாரோ....தமிழக காவல் துறையும், மத்திய புலனாய்வு முகமையும்,
அன்பரசன் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆவேசத்துல என்ன பேசுறோம்னு தெரியாம பேசிட்டாரே... மோடி 3.0 வந்ததும் இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்குமே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: 'திராவிட மாடல்' ஆட்சியின் இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன், நீங்க நலமா போன்ற திட்டங்களுக்கு செலவிட்டதாக சொல்லப்படும் தொகை, பயனாளிகள் கணக்கு ஆகியவை முந்தைய தி.மு.க., ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் நடந்த, 'மஸ்டர் ரோல்' ஊழலை நினைவு படுத்துகின்றன.
சரி விடுங்க... இன்னைக்கு அவங்க கோடு போட்டா, நாளைக்கு நீங்க ஆட்சிக்கு வந்ததும் அது மேல ரோடு போட போறீங்க!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: ஆழ்ந்த பக்குவமும், அரசியல் முதிர்ச்சியும், கொள்கை பற்றும் கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஜாதிய எல்லைகளை கடந்து, வெகுஜன தலைவராக பரிமாணம் பெற அனைத்து தகுதிகளும் கொண்டவர். ஆனால், பல தேர்தல்களாக பட்டியலுக்கு உள்ளேயே அவரை அடக்கி வைத்திருப்பது, தி.மு.க.,வின் ஒரு வகை தீண்டாமை தானே!
அவரை யார் அடங்கி இருக்க சொன்னது... 'அடங்க மறு' என்ற அவர்களின் வசனத்தை, அவர்களே மறந்து ரொம்ப நாளாச்சு!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கிராமத் தில், 110 கோடி ரூபாய் மதிப்புள்ள, 100 கிலோ ஹாஷிஷ் போதைப்பொருளையும், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 876 கிலோ கஞ்சாவையும் சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இது, தமிழக அரசு மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.
போதைப் பொருள் விவகாரம், தேர்தல் நேரத்துல தமிழக அரசை, 'கிறுகிறுக்க' வச்சிடும்னு தான் தோணுது!

