PUBLISHED ON : மார் 17, 2024 12:00 AM

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
தமிழகத்தில் 4,000 உதவி
பேராசிரியர்களை தேர்ந்தெடுக்க போட்டி தேர்வு அறிவிக்கை
வெளியிடப்பட்டுள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் மொத்தமுள்ள, 10,079
பணியிடங்களில், 7,500 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த
காலங்களில் ஆசிரியர்கள் தேர்வில் இட ஒதுக்கீடு விதிகளில் பல்வேறு தவறுகள்
நிகழ்ந்தன. உதவி பேராசிரியர் நியமனத்தை நேர்மையாக, சமூகநீதி காக்கும்
வகையில் நடத்த வேண்டும்.
எச்சரிக்கை கொடுத்துட்டீங்கல்ல... எந்த சர்ச்சையும் இல்லாமல், உதவி பேராசிரியர் நியமனம் நடக்குதான்னு பார்க்கலாம்!
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை: ஒரே கல்லில், இரண்டு மாங்காய்கள் என்பது போல, இரண்டு, மூன்று முக்கியமான தேர்தல் சீர்திருத்தங்களையும் மத்திய அரசு அமலாக்குமேயானால், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை ஏற்க மறுக்கும் அரசியல் கட்சிகள் கூட ஏற்றுக்கொள்ளும். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இருக்கக்கூடிய தேர்தல் முறையை, நான்காண்டுக்கு ஒரு முறை என மாற்ற வேண்டும்.
அதெல்லாம் ஆட்சியை பிடிக்க காத்திருப்போர் கவலைப்பட வேண்டிய விஷயமாச்சே... டாக்டருக்கு ஏன் இந்த கவலை?
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீன் பேட்டி: 'லோக்சபா தேர்தலில் பா.ஜ., 375 தொகுதி களில் வெற்றி பெறும்' என ஜோதிடம் கூறி இருக்கின்றனர். பிரதமர் மோடி தோல்வியடைவது நிச்சயம். 'இண்டியா' கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதன்பின், நாட்டின் பிரதமர் யார் என்பதை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார்.
தமிழகத்தில் வெற்றி உறுதி சரி... இந்த 39 சீட்டை மட்டும் வச்சுக்கிட்டு பிரதமரை தேர்வு செஞ்சுட முடியுமா என்ன?
நடிகரும், தி.மு.க., சிறுபான்மை நலப்பிரிவு உறுப்பினருமான ஜெ.எம்.பஷீர் அறிக்கை: அரசியல் சுயநலத்திற்காக சிலர், மதத்தின் பெயரால் முஸ்லிம்களை பிரிக்க நினைக்கின்றனர். சிறுபான்மை மக்களான எங்களுக்கு அரசியலில் அங்கீகாரம் அளித்து அழகு பார்த்த கட்சி தி.மு.க, தான். எங்களுக்கு கட்சியில் முக்கியபொறுப்புகளையும் தரும் ஒரே கட்சி தி.மு.க, தான். வாழும் காயிதே மில்லத் ஆக ஸ்டாலின் இருக்கிறார்.
சிறுபான்மை பிரிவு உறுப்பினரா ஆக்குனதுக்கே காயிதே மில்லத் ஆக்கிட்டார்... ஒருவேளை தலைவராக்கிட்டா, ஸ்டாலினுக்கு என்ன புரமோஷன் தருவார்?

