PUBLISHED ON : மார் 18, 2024 12:00 AM

காங்கிரஸ் முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ் பேட்டி:
தேர்தல்
வரும் போது, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது, பா.ஜ.,வுக்கு வாடிக்கையான
ஒன்று. தேர்தல் பத்திரங்கள் குறித்து செய்திகள் தலைப்பு செய்திகளாக
வருவதால், அந்த செய்தியை திருடிக் கொள்ளவே பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
என அறிவித்து உள்ளனர்.
தேர்தல் நேரத்துல ஆளுங்கட்சி சலுகைகளை அறிவிக்கிறதும், எதிர்க்கட்சி வாக்குறுதிகளை வாரி வீசுறதும் காலங்காலமாய் நடப்பது தானே!
தி.மு.க., தலைமை செய்தி தொடர்பு துணை செயலர் கோவை செல்வராஜ் அறிக்கை: ராஜ்யசபாவில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, தி.மு.க., தீர்மானம் கொண்டு வந்த போது, பழனிசாமி ஆதரித்திருந்தால், இந்த குடியுரிமை சட்டமே இந்தியாவில் வந்திருக்காது. குடியுரிமை சட்டம், சிறுபான்மையின மக்களை பாதிக்கும் என தெரிந்திருந்தும் பழனிசாமி ஆதரித்தார். இப்போது, நீலி கண்ணீர் வடிக்கிறார்.
அப்ப கூட்டணியில் இருந்தார்; ஆதரித்தார்... இப்ப வெளியே வந்துட்டார்; எதிர்க்கிறார்... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
தமிழக காங்கிரஸ் துணை தலைவர், ராம.சுகந்தன் அறிக்கை: வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் ஏன் கொடுக்க வேண்டும் என, போராடி வரும் பன்னீர்செல்வம், தினகரன் போன்றவர்களுடன் கூட்டணி வைக்க, பா.ம.க.,விற்கு எப்படி மனம் வருகிறது? ஒவ்வொரு முறையும் வன்னியர் களின் நலனை காவு கொடுத்து, தங்கள் குடும்ப நலனே முக்கிய கொள்கையாக வைத்து, தேர்தலை சந்திக்கும் இவர்களுக்கு, ஓட்டு கேட்க வரும் போது வன்னிய மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்.
காங்கிரசை கடுமையாக எதிர்த்த திருமாவளவன், ஒரே கூட்டணியில், தற்போதும் அக்கட்சியோடு பயணிக்கலையா... அது மாதிரி, பா.ஜ.,வோடு தானே, பா.ம.க., கூட்டணி பேசுறாங்க!
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு சிறப்பாக உள்ளதாக, ஆஸ்திரேலிய அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த பெருமைக்கு, பெரும் பங்களிப்பு செய்து வரும் மருத்துவர்களுக்கு வேறு எந்த நாடு, மாநிலத்துடனும் ஒப்பிட முடியாத படி, குறைவான ஊதியம் தரப்படுவது தான் வேதனை.
தேர்தல் நேரத்துல வேதனை, சோதனைன்னு புலம்பினா ஆகாது டாக்டர்... 'ஆளுங்கட்சிக்கு எதிரா செயல்படுவோம்'னு ஒரு அறிக்கையை தட்டி விடுங்க!

