PUBLISHED ON : மார் 19, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: மத்திய
அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டாலும், புதிய கல்வி கொள்கையை எந்நாளும் எதிர்ப்போம் என,
அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். இருக்கு; ஆனால் இல்லை என்கிறார். நீட்
தேர்வு எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு என, எல்லாமே
'பிம்பிளிக்கி பிளாக்கி' தான். இதுதான் திராவிட மாடல்.
'வார்டர்னா
அடிப்போம்'னு சொல்ற வடிவேலு பட காமெடி மாதிரி, மத்திய அரசு எதை செய்தாலும்
எதிர்ப்போம்னு இருக்கிறவங்களை ஒண்ணும் பண்ண முடியாது!
கன்னியாகுமரி காங்., - எம்.பி.,விஜய்வசந்த் அறிக்கை: 'கேரள எல்லையில் இருந்து கன்னியாகுமரி வரை நான்குவழி சாலை திட்டம் சாத்தியமில்லை' என பா.ஜ., அரசு கைவிரித்து விட்டது. தொகுதி மக்களுக்கான போராட்டங்களை நான் மேற்கொண்ட போது, இத்திட்டத்தை துவங்க விடாமல் பா.ஜ.,வினர் முட்டுக்கட்டை போட முயற்சித்தனர். ஆனால், குமரியில் நடந்த பா.ஜ., கூட்டத்தில் இந்த திட்டத்தை பா.ஜ., ஆட்சியின் சாதனையாக கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.
காங்கிரஸ் பத்தாண்டுகள் தொடர்ந்து, மத்தியில் ஆட்சியில் இருந்தப்ப இந்த திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாமே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: போதை பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கும், தி.மு.க.,வுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், அந்த நபர் தி.மு.க.,வில் வகித்து வந்த பதவி, சாதாரண பதவி தான் என்றும், அந்த நபர் காவல் துறையை ஏமாற்றியது போல், தி.மு.க.,வையும் ஏமாற்றி விட்டார் என்ற, ஆர்.எஸ்.பாரதியின் முரண்பாடான பேச்சு, 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற சொலவடையை நினைவுபடுத்துவதாகவே உள்ளது.
ஜாபர் சாதிக் ஒருவேளை அ.தி.மு.க., - பா.ஜ.,ன்னு இவங்களுக்கு ஆகாத கட்சியில் இருந்திருந்தால், 'பாவம், அந்த கட்சியை ஜாபர் சாதிக் ஏமாத்திட்டார்'னு பாரதி சொல்லி இருப்பாரா?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது, இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகும்.
தேர்தல் நேரத்துல மீனவர்கள் கைது அதிகமா நடக்குதே... இதுல வெளிநாட்டு சதி எதுவும் இருக்குமோ?

