PUBLISHED ON : மார் 20, 2024 12:00 AM

திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா பேச்சு: பா.ம.க.,விற்கு
மாம்பழம் சின்னம்,ம.தி.மு.க.,விற்கு பம்பரம் சின்னம் வாங்கிக்
கொடுத்ததும், தே.மு.தி.க.,விற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வாங்கிக்
கொடுத்ததும் அ.தி.மு.க., தான்.
இப்ப, என்ன சொல்ல வர்றாரு...
சின்னமும், எதிர்க்கட்சி அந்தஸ்தும் வாங்கி தந்த நன்றிக்கடனுக்காவது
கூட்டணிக்கு வந்திருக்கலாமேன்னு ஆதங்கப்படுறாரா?
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி பேட்டி: திண்டுக்கல் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 35 ஆண்டுகளுக்கு பின் களம் இறக்கப்பட்டுள்ளது. அக்கட்சி, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சமத்துவ கொள்கையை கொண்டுள்ளது. இந்த தேர்தலிலும் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் அக்கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்வோம்.
அப்படி எல்லாம் ஜெயிக்க வச்சுட்டா, அடுத்தடுத்த தேர்தலிலும் திண்டுக்கல்லை கேட்டு தோழர்கள் கொடி பிடிக்க ஆரம்பிச்சிடு வாங்களே... அப்ப என்ன செய்வீங்க?
தமிழக காங்., பொதுச் செயலர்காண்டீபன் பேச்சு: தேர்தல் பத்திரம் திட்டத்தின் படி நிதி வழங்கிய நிறுவனங்கள், தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல், அரசியல் கட்சிகளுக்கு வாரி, வாரி வழங்கின. தகவல் அறியும் உரிமை சட்டத்தை, தேர்தல் பத்திர திட்டம் மீறுவதாக இருப்பதால், அத்திட்டத்தை ரத்து செய்ய, தொண்டு நிறுவனங்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. வழக்கின் தீர்ப்பு வாயிலாக தேர்தல் பத்திர முறை முடிவுக்கு வந்திருப்பது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இப்ப கணக்கோடு நிதி வாங்கிய கட்சிகள், இனி கணக்கு வழக்கு இல்லாம வாங்க போகுது... அவ்வளவு தானே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேச்சு: நாம் கடுமையாக உழைக்க வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து எறும்பு, தேனீ போல் ஓட்டு சேகரிக்க வேண்டும். இங்கு நம் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. நம்மை பார்த்து கூட்டணிக்கு கட்சிகள் வரவில்லை என்கின்றனர். தேர்தலில் நம்மை எதிர்த்து நிற்போரை டிபாசிட் இழக்க செய்ய வேண்டும். அ.தி.மு.க., தொண்டனை யாராலும் வெல்ல முடியாது.
'பலமான கூட்டணி அமைப்போம்'னு கூவிட்டு, இப்ப, 'யாரை நம்பி நான் பிறந்தேன்... போங்கடா போங்க...' என, பாட்டு பாடுற நிலைமைக்கு வந்துட்டீங்களே!

