PUBLISHED ON : மார் 20, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: 'அரசு
அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்
நடைமுறை, 2026 ஏப்., 1 முதல் அமல்படுத்தப்படும்' என, தி.மு.க.,
அரசின் பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசித்த
வயிற்றுக்கு இன்றே உணவளிக்காமல், நாளை தருவதாக சொல்லி,
பட்டினியோடு கிடப்பவரை பரிதவிக்க விடுவது போல் இந்த அறிவிப்பு
இருக்கிறது.
அதாவது 2026 ஏப்ரல், மேயில் தானே சட்டசபை தேர்தல்
நடக்கும்... அதை மனசுல வச்சுதான், இப்படி ஒரு கேரட்டை அரசு ஊழியர்களுக்கு
காட்டியிருக்காங்க!
தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பேச்சு: மும்மொழி கொள்கை உள்ளிட்டவற்றை எல்லாம் முன்னெடுத்து, தமிழக எம்.பி.,க்கள், பார்லிமென்டில் போராடுகின்றனர்; குரல் கொடுக்கின்றனர். எனவே, தமிழகத்தில் தொகுதிகளை குறைத்து விட்டால், இவர்களின் குரல் வலு குறையும் என, தப்பு கணக்கு போடுகின்றனர். தொகுதி மறுசீரமைப்பால் யாரெல்லாம் பாதிக்கப்படுவரோ அவர்களை எல்லாம் ஒன்றிணைக்கும் சக்தியாக, நம் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். இதனால் தான் பா.ஜ.,வுக்கு நம் முதல்வர் மீது தனி கோபம்.
நாளைக்கு அமலாக்க துறையும், சி.பி.ஐ.,யும் அதிரடி சோதனைகளை நடத்தினா, தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படுறவங்க உங்க உதவிக்கு வருவாங்களா?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: தனித்தனி பஸ்சில் கூட வாங்க. ஆனால், எல்லாரும் ஒழுங்கு முறையா தேசிய ஜனநாயக கூட்டணி பஸ் நிலையத்தில் வந்து இறங்கிட வேண்டும். மறுத்தால், செங்ஸ் போல, தங்ஸ், வேல்ஸ் என, இன்னும் பல பயணியர் பழனிசாமி பஸ்சில் இருந்து இறங்க வேண்டியிருக்கும். அம்புட்டுதான்.
தே.ஜ., கூட்டணி பஸ் ஸ்டாண்ட்ல பல மாசமா பெட்டி, படுக்கையுடன் படுத்துக் கிடக்கும் நம்மை கண்டுக்காம, புது பயணியருக்கு வலை வீசுவதை பொறுக்க முடியாம பொருமுறாரோ?
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: பா.ஜ.,வினரை கைது செய்வதால் மட்டும் தமிழகத்தில் தர்மத்தை அழித்து விட முடியாது. நாங்கள் இந்திராவின் கொடூர எமர்ஜென்சி காலத்தையே சந்தித்தவர்கள். அதை தைரியமாக எதிர்கொண்டு, தி.மு.க.,வுக்கும் தைரியம் கொடுத்தவர்கள். எங்கள் கட்சியினர் கைதுகள், நீங்கள் கைதாவதற்கு முன்னோட்டம் தான் என்பதை விரைவில் நீங்கள் உணர்வீர்கள்.
யார் ஆட்சிக்கு வந்தாலும், போலீசாருக்கு மட்டும் வேலை கொடுத்துட்டே இருப்பாங்க என்பது மட்டும் நிச்சயம்!