PUBLISHED ON : மார் 22, 2025 12:00 AM

அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை:
'மக்களை
தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், இதயம் காப்போம்' உட்பட சுகாதாரத்
துறையில் பல்வேறு திட்டங்களை தந்துள்ள அரசு, தற்போது தமிழகம் முழுதும்
முதல்வர் மருந்தகங்களை துவங்கி உள்ளது. இருப்பினும், அரசு மருத்துவர்களை
தொடர்ந்து தங்கள் ஊதியத்திற்காக போராட வைப்பது, மிகப்பெரிய வரலாற்று
பிழையாகவே அமையும் என்பதை அரசுக்கு தெரிவித்து கொள்கிறோம்.
ஜாக்டோ -
ஜியோ உள்ளிட்ட ஊழியர் சங்கங்கள் அரசுக்கு எச்சரிக்கை கொடுத்து வரும்
நிலையில், அவங்க வரிசையில் டாக்டர்கள் சங்கமும் சேர்ந்துடும் போலிருக்கே!
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: ஆண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க இயலாத, தகுதியற்ற அரசாக தி.மு.க., உள்ளது. நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரிப்பது, தமிழகத்தில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழலை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது 20 முதல் 25 சதவீதம் மட்டுமே. மற்றவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிவது, குற்றவாளிகளை மேலும் அதிகரிக்கிறது.
'உப்பை தின்றால் தண்ணீர் குடிக்கணும்' என்பது போல, குற்றம் செய்தால் தண்டனை உறுதி என்ற நிலை வந்தால் தான், சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்காம இருக்கும்!
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி: மதுராந்தகத்தில் மே 5ம் தேதி, 42வது வணிகர் மாநாடு நடக்கிறது. மாநாட்டில், தமிழக முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் வர்த்தக ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து வணிகர்களை பாதுகாக்க, மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பாதுகாப்பு சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்த உள்ளோம்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தால் மத்திய, மாநில அரசுகளுக்கும் வரிகள் வருமே... அதனால, இவங்க கோரிக்கை எடுபடுமா?
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒன்றாக இருப்பதில்ஆச்சரியம் இல்லை. சிலரின்சுயநலத்தால் பிரிந்தவர்கள்எல்லாம், தி.மு.க., வை வீழ்த்த, ஓரணியில் இணைந்து இருக்க வேண்டும்என்பதை உணர்ந்துள்ளனர். சட்டசபையில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுடன் பன்னீர்செல்வம் இணைந்து செயல்படுவதை பார்க்கும் போது, அதற்கான காலம் கனிந்து வருவதாக நான் கருதுகிறேன்.
பன்னீர் தான் வாலன்டியரா அ.தி.மு.க., வண்டியில ஏற பார்க்கிறார்... அவங்க, இவரை கண்டுக்கிட்ட மாதிரியே தெரியலையே!