PUBLISHED ON : ஏப் 04, 2025 12:00 AM

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி: ஏற்கனவே, மத
பிரிவினைவாதத்தின் மூலமாக இந்தியாவை பதற்றமாக வைத்து, தங்கள் கையிலே வைத்து
கொள்ளலாம் என்று முயற்சித்தவர்கள், இன்றைக்கு மக்கள் தொகை அடிப்படையில்
தொகுதி சீரமைப்பு என்ற பெயரில், சில குறிப்பிட்ட மாநிலங்களை கையில்
வைத்துக்கொண்டு, மற்ற மாநிலங்களை மிரட்டலாம் என்ற நோக்கத்தில் இறங்கி
உள்ளனர்.
'தொகுதி சீரமைப்பு இப்போதைக்கு இல்லை'ன்னு மத்திய அரசு
திட்டவட்டமா மறுத்துடுச்சு... ஆனா, 2026 சட்டசபை தேர்தல் வரைக்கும் இதை
வச்சே வண்டியை ஓட்ட முடிவு பண்ணிட்டீங்க என்பது நல்லாவே தெரியுது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேட்டி: அ.தி.மு.க.,வை, 'அமித் ஷா தி.மு.க.,' என காங்., -- எம்.பி., மாணிக்கம் தாகூர் சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் காங்கிரஸ் இல்லை. ஸ்டாலின் காங்கிரஸ் தான் என்று நாங்களும் சொல்லலாமா... செல்வப்பெருந்தகை ஒருமுறையாவது ராகுல், சோனியா, கார்கே பற்றி பேசியுள்ளாரா; 'ஸ்டாலின் போல் ஸ்டாலின் போல்' என்று தான் பேசுகிறார். நாங்கள் அப்படி இல்லை. எங்கள் கொள்கையில் சரியாக உள்ளோம்.
நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும், தமிழக காங்., கட்சி, தி.மு.க.,வின் கிளை கழகமாக மாறி ரொம்ப நாளாச்சு!
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: தி.மு.க., ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில், மது விலக்கை படிப்படியாக கொண்டு வர, தி.மு.க., அரசு எடுத்த முயற்சி என்ன? பிற போதை பொருட்கள் புழக்கம் மற்றும் கள்ளச்சாராய புழக்கத்தை அதிகப்படுத்தியதை வேண்டுமானால், மது விலக்கிற்கு தி.மு.க., எடுத்த முயற்சியாக கருதலாம். மது உட்பட அனைத்து போதை பொருட்களையும் ஒழிக்க, மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டிய காலம் வந்துவிட்டது.
'திருடராய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது' என்பது போல, குடிப்பவர்கள் திருந்தாத வரைக்கும் தமிழகத்தில் போதையை ஒழிக்கவே முடியாது!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் எங்கள் கூட்டணியை ஆதரிக்க வேண்டும். தி.மு.க.,விற்கு மாற்றாக, தேசிய ஜனநாயக கூட்டணி தான் இருக்க முடியும். மக்கள் ஏற்றுக் கொள்வது போல், தகுதியான ஒருவரது தலைமையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்படும்.
அந்த தகுதியான தலைவர் பழனிசாமி இல்லைன்னு சொல்ல வர்றாரா?

