PUBLISHED ON : ஏப் 07, 2025 12:00 AM

அ.தி.மு.க., அமைப்பு செயலர் செம்மலை அறிக்கை:
முன்னாள் பிரதமர்
இந்திரா ஆட்சியில், லோக்சபா தொகுதிகளை சீரமைத்த போது, தி.மு.க., ஆதரவு
தெரிவித்தது. இதில், தமிழகத்துக்கு இருந்த, 41 இடங்கள், 39 ஆக குறைந்த
போது, தி.மு.க., எதிர்க்கவில்லை. 1973ல் லோக்சபா தொகுதி எண்ணிக்கையை 525ல்
இருந்து, 545 ஆக உயர்த்திய போதும், தமிழகத்துக்கு மட்டும், 39
எம்.பி.,க்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. அதையும், தி.மு.க., பெரிதாக
எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது, தமிழகத்தில் இருக்கும் பல பிரச்னைகளை
மடைமாற்றம் செய்யவே, இப்பிரச்னையை, தி.மு.க., கையில் எடுத்துள்ளது.
அப்படி என்றால், இப்பிரச்னையில், தி.மு.க., அரசுக்கு, அ.தி.மு.க., ஆதரவு தெரிவிப்பது ஏன்?
த.மா.கா., துணைத் தலைவர் முனவர் பாட்ஷா பேட்டி:
'தமிழகத்தில், தி.மு.க., தலைமையில் கூட்டணி; தேசிய அளவில், 'இண்டியா' அணி தலைமையில் கூட்டணி' என, அக்கூட்டணி கட்சியினர் சொல்கின்றனர். அதே போல, தேசிய அளவில், பா.ஜ., தலைமையில், தே.ஜ., கூட்டணி என்றால், தமிழகத்தில், அ.தி.மு.க., தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும்.
அ.தி.மு.க.,வுக்கு, 'ஐஸ்' வச்சு, சட்டசபை தேர்தலுக்கு இப்பவே தொகுதிக்கு, 'துண்டு' போடுறாரோ?
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை:
'காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதியை விரைந்து வழங்க வேண்டும்' என, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரை, கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்ற மறுத்து, தமிழகத்திற்கான நீரை, உரிய நேரத்தில் வழங்க மறுத்து வரும் கர்நாடக அரசு, தற்போது காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என, பிடிவாத போக்குடன் செயல்படுவது கண்டனத்துக்குரியது.
கர்நாடகாவின் முதல்வர், காங்., கட்சியை சேர்ந்தவர்... காங்., தலைமையிலான, 'இண்டியா' கூட்டணியில் இருக்கும், தி.மு.க., அரசு, இதை கண்டிக்காம மவுனமாக இருப்பது ஏன்?
தி.மு.க.,வின் முன்னாள் செய்தி தொடர்பு செயலர், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிக்கை:
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, 'வக்ப்' சட்டத்திருத்த மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்றியுள்ள மத்திய அரசின் நடவடிக்கையை கேரள சர்ச்சுகள் கூட்டமைப்பு ஆதரிக்கிறது. ஏற்கனவே, நடைமுறையில் இருந்த வக்ப் சட்டம், அடிப்படை இயற்கை நீதிக்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரானதாக இருந்தது. அதை மாற்றியுள்ள, வரலாற்று சிறப்புமிக்க இந்த வக்ப் சட்டத்திருத்த மசோதாவை அனைத்துக் கட்சி, எம்.பி.,க்களும் ஆதரித்திருக்க வேண்டும்.
இவரை ஏன், தி.மு.க.,வில் இருந்து நீக்குனாங்க என்பது இப்ப தானே தெரியுது!

