PUBLISHED ON : ஏப் 08, 2025 12:00 AM

சிவகங்கை காங்., -- எம்.பி., கார்த்தி பேட்டி: தமிழகத்தில் பெரிய
கட்சியுடன் யாராவது கூட்டணி வைக்க வேண்டும் என்றால், அவர்கள் தான் தேடி
வருவர். ஆனால், அ.தி.மு.க., பொதுச்செயலரை பா.ஜ., டில்லிக்கு அழைக்கிறது.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி என்பது வேதனை அளிக்கிறது. 'இண்டியா'
கூட்டணிக்கு தமிழகத்தில் தி.மு.க., தலைமை வகிக்கிறது. 2026 சட்டசபை
தேர்தலில் இந்த கூட்டணி வெல்லும்.
'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, தி.மு.க., - காங்.,கூட்டணி வெற்றிக்கு வேட்டு வச்சிடுமோ' என்ற இவரது பயம் நன்றாகவே தெரியுது!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: மாமல்லபுரத்தில், மே 11ல் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு நடக்கவுள்ளது.வன்னியர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் இன்றும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இந்த அவலநிலை மாற வேண்டும். தமிழகம், இந்தியாவின் முன்னேறிய மாநிலமாக மாற வேண்டும் என்றால், வன்னியர் உள்ளிட்ட அனைத்து பின்தங்கிய சமுதாயங்களும் முன்னேற வேண்டும். இதை வலியுறுத்தவே, இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
'அனைத்து பின்தங்கிய சமுதாயங்களும் முன்னேற வேண்டும்' என சொன்னாலும், வன்னியர்களுக்கு மட்டும் தானே உள்ஒதுக்கீடு கேட்கிறாங்க!
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் பேட்டி: 'திருத்தணியில் புதுப்பிக்கப்பட்ட காமராஜர் தினசரி வணிக வளாகத்திற்கு காமராஜர் பெயரே தொடரும்' என, தமிழக அரசு அறிவித்தது. ஆனால், புதுப்பிக்கப்பட்டுள்ள வணிக வளாகத்தை காமராஜர் பெயரில்லாமல் திறந்து வைப்பதாக, அழைப்பிதழ் அச்சிடப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. காமராஜரின் பெயரை இருட்டடிப்பு செய்யும் வேலையில் தி.மு.க., அரசு கவனமாக செயல்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது.
திருச்சி நுாலகத்துக்கு காமராஜர் பெயரை வைக்கிறேன்னு சொல்லிட்டு, திருத்தணி மார்க்கெட்டில் இருந்து எடுத்துட்டாங்களோ?
அன்னை பாத்திமா ஆதரவற்ற குழந்தைகள் நல காப்பகத்தின் நிறுவனரும், த.மா.கா., பொதுச் செயலருமான ராணி கிருஷ்ணன் பேச்சு: 'சமூக வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில், அரசு இயந்திரத்தின் பணியை போலவே, அரசுசாரா தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களின் பங்கும் மிக முக்கியமானது. அவர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும்' என, வி.சி., கட்சி எம்.எல்.ஏ., சிந்தனைசெல்வன் சட்டசபையில் பேசியது வரவேற்கத்தக்கது.
எதிர்க்கட்சி கூட்டணி எம்.எல்.ஏ., பேச்சை வரவேற்கிறாங்களே... இவங்க தலைவர் வாசன் ஏதும் சொல்லமாட்டாரா?

