PUBLISHED ON : ஏப் 09, 2025 12:00 AM

அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை: 'ஆயிரம்
முதல்வர் மருந்தகம்' என, ஸ்டாலின் பெருமையாகப் பேசி வருகிறார். இதில்,
புற்றுநோய், இதய நோய், தைராய்டு போன்ற நீண்ட நாள் நோய்களுக்கு
எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள் மற்றும் விஷக்கடிகள், ரேபிஸ் உள்ளிட்ட
நோய்த்தடுப்பு மருந்துகள் உள்ளனவா? ஆனால், 'பெரும்பாலான மருந்துகள் இல்லை'
என, மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த திட்டம் துவங்கி, இதுவரை எத்தனை
மக்கள், குறிப்பாக, கிராமப்புற மக்கள் பயன் பெற்றனர் என்பதைக் குறிப்பிட
வேண்டும்.
இவர் டாக்டர் என்பதால், முதல்வர் மருந்தகத்தில் இல்லாத மருந்துகளா பார்த்து பட்டியல் போட்டு, 'கிடுக்கிப்பிடி' போடுறாரோ?
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: 'மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வக்ப் சட்டத்தை வரவேற்கிறோம்' என, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் கூறியுள்ளார். வக்ப் வாரிய சொத்துக்களை ஏழை, எளிய முஸ்லிம்களுக்கு கொண்டுபோய் சேர்க்காமல் அனுபவித்து வரும் சில முதலைகளுக்கு எதிரானது தான் புதிய சட்டம் என்பதை புரிந்துகொண்ட தலைவர்களில் ஷேக் தாவூத்தும் ஒருவர்.
சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் ஷேக் தாவூத்துக்கு ஒரு சீட் உறுதி!
தமிழக பா.ஜ., மீனவரணி தலைவர் எம்.சி.முனுசாமி அறிக்கை: பிரதமர் மோடியின் மூன்று நாள் இலங்கை பயணம், நுாற்றுக்கு இருநுாறு சதவீதம் வெற்றி அடைந்துஉள்ளது. அவரது வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசு விடுவித்துள்ளது. விசைப்படகுகளும் மீட்டு தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்கப்படும். இலங்கை சிறையில் வாடும் அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்படுவர் என்ற நம்பிக்கை தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
சிறையில் இருக்கும் மீனவர்கள் விடுதலை இருக்கட்டும்... இனி, நம்ம மீனவர்களை சிறை பிடிக்காம இருக்கணும் என்பது தான் முக்கியம்!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை: எங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள், 1.37 லட்சம் பேரைக் கொன்று குவித்தது இலங்கை ராணுவம் தான். 'இனப்படுகொலை நடத்திய இலங்கை ராணுவத்தை, பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரித்து தண்டிக்க வேண்டும்' என, தமிழ் இனம் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இலங்கை ராணுவத்தோடு பிரதமர் மோடி ராணுவ ஒப்பந்தம் செய்திருப்பது, தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் துரோகம்.
அப்புறம் என்ன... ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னை டூ டில்லிக்கு ஒரு நடைபயணத்தை துவங்கிட வேண்டியது தானே!

