PUBLISHED ON : ஏப் 12, 2025 12:00 AM

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை:
மாநில அரசு அனுப்பும் மசோதாக்களில் முடிவெடுக்க, கவர்னர்களுக்கு
காலக்கெடுவை நிர்ணயம் செய்து, மாநில உரிமைகளை உச்ச நீதிமன்றத்தின்
தீர்ப்பு பாதுகாத்துள்ளது. மக்களால் தேர்வு செய்யப்படாதவர்கள்,
அதிகார மையமாக மாறுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும். கூட்டாட்சி
மற்றும் மாநில உரிமைகளின் ஆதரவாளரான கருணாநிதியின்
அடிச்சுவடிகளை பின்பற்றிய தமிழக அரசை பாராட்டுகிறேன்.
தி.மு.க., தர இருக்கும், மக்களால தேர்வு செய்யப்படாத ராஜ்யசபா எம்.பி., பதவியை வேண்டாம்னு கமல் சொல்லிடுவாரா?
தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் பேட்டி: கச்சத்தீவை தி.மு.க., தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு, தற்போது, 'மீட்க வேண்டும்' என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது கேலிக்கூத்தாக உள்ளது. பிரதமர் மோடியால் மட்டுமே கச்சச்தீவை மீட்க முடியும். இதையும் பிரதமர் மோடி செய்து காட்டுவார்.
'கச்சத்தீவை மீட்கணும் என, தி.மு.க., ஆட்சியில் எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன' என்ற தலைப்பில், ஒரு போட்டியே நடத்தலாம் போலிருக்கு!
'நக்கீரன்' பத்திரிகை ஆசிரியர் கோபால் பேட்டி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., ஆட்சியில், நான் மூன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தேன். என்னை கைது செய்து சிறையில் அடைத்தபோதும், 11 முறை கொலை செய்ய முயற்சி செய்தனர். என் மீது மூன்று கொலை வழக்குகள், நான்கு கடத்தல் வழக்குகள், ஒரு 'பொடா' வழக்கும் போடப்பட்டது. சிறையிலிருந்து வெளியே வந்து வழக்குகளை தாண்டி வருவதற்குள் மறுபடியும் ஜெ., தலைமையில் ஆட்சி அமைந்தது. மறுபடியும் என் மீது வழக்குகள் போட்டனர். இப்படி வழக்கும், ரெய்டும், விசாரணையும் என மாறி மாறி சந்தித்த அனுபவம் உண்டு.
நல்லவேளை... ஜெ., வழியில் ஆட்சி நடத்திய பழனிசாமியால், இவருக்கு எந்த பிரச்னையும் வரலை!
காமராஜர் மக்கள் கட்சியின்மாநில பொதுச்செயலர்குமரய்யா அறிக்கை: 'நீட்' தேர்வு மசோதா நிறைவேற்றப்பட்டபோது, காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்த மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் காந்தி செல்வன் தி.மு.க.,வில் தானே இருந்தார். அப்படி நீட் தேர்வு மசோதாவுக்கு ஆதரவாக அவர் நடந்து கொண்டார் எனில், அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறினாரா இல்லையா? அப்படி மீறினார்என்றால், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைஎன்ன என்ற கேள்விக்கு, முதல்வர் ஸ்டாலின் விளக்கம் தருவாரா?
'நீட்' தேர்வு விவகாரத்தில் இந்த கேள்விக்கு மட்டும் தி.மு.க., தரப்பால் பதில் தரவே முடியாது!

