PUBLISHED ON : ஏப் 16, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி: அரசியலுக்கு
அடி எடுத்து வைத்துள்ள நடிகர் விஜய், இன்னும் ஒரு தேர்தலை கூட
சந்திக்கவில்லை. அவருடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு, எவ்வளவு ஓட்டுகள்
உள்ளன என்பதே தெரியாது. ஆனால், 'எங்களுக்கும், ஆளுங்கட்சியான
தி.மு.க.,வுக்கும் தான் போட்டி' என விஜய் சொல்வது காமெடியாக உள்ளது.
தேவையானால், 2025ம் ஆண்டின் சிறந்த நகைச்சுவையாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
விஜய்
கட்சியை சாதாரணமா எடை போடுறாரே... 2026 சட்டசபை தேர்தல் களம் என்பது,
தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்குமான போட்டியாக மட்டும் இருக்காது என்பது
மட்டும் நிச்சயம்!
மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பேச்சு: ஒரு சமயத்தை உயர்த்தியும், ஒரு சமயத்தை இழித்தும் பேசுவதை வாடிக்கையாக்கி உள்ளனர் தமிழக அமைச்சர்கள். அந்த வகையில் தான், அமைச்சர் பொன்முடியும், சைவ, வைணவ சமூகங்களை மிகக் கேவலமாக பேசி உள்ளார். அமைச்சர் பொன்முடி மீது, முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.
அவரது கட்சி பதவியை மட்டும் பறிச்சுட்டு, அமைச்சர் பதவியில் நீடிக்க விட்டது எப்படி பாராட்டுக்குரியதாக இருக்க முடியும்?
ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: கும்பகோணம் அரசு மருத்துவமனையில், அனுமதியின்றி மதப் பிரசாரம் செய்த கிறிஸ்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், அமைதியான முறையில் அங்கு சென்று நோயாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய, ஹிந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலர் குருமூர்த்தியை கைது செய்துள்ளது கண்டனத்துக்குரியது. அரசு மருத்துவமனைகளில் சட்ட விரோதமாக மதப் பிரசாரம் செய்தால், அதை சரி என்கிறதா அரசு?
மதப் பிரசாரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், மதச்சார்பற்ற அரசு என்ற நற்பெயருக்கு பங்கம் வந்துடுமே!
தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் பேட்டி: தி.மு.க.,வுக்கு யாரும் போட்டியே கிடையாது. நாங்கள் யாரையும் எதிரியாக நினைக்கவில்லை. ஆனால், பா.ஜ., முதல் த.வெ.க., வரை தி.மு.க.,வை எதிரியாக நினைக்கின்றன. தி.மு.க., என்பது மாபெரும் தொண்டர்கள் இயக்கம். அக்கட்சி யாரோடு கூட்டணி வைத்தாலும், வைக்காவிட்டாலும், 2026 சட்டசபை தேர்தலிலும் பெரு வெற்றி பெறும்; இது உறுதி.
அப்படி என்றால், கூட்டணி கட்சிகள் துணையின்றி, '234 தொகுதிகளிலும் தி.மு.க., தனித்து போட்டி' என அறிவிக்கும் துணிச்சல் இவங்க தலைமைக்கு இருக்கா?

