PUBLISHED ON : ஏப் 17, 2025 12:00 AM

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட மருது அழகுராஜ் அறிக்கை: விருப்பம்
இல்லாத பெண்ணை வற்புறுத்தி வரவழைத்து, ஒருவழியாக நிச்சயம்
நடந்திருக்கிறது. முகூர்த்தத்துக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கு. ஏற்கனவே
வலப்பக்கத்தில் அமர்ந்துவிட்டு தப்பியோடிய அனுபவம், அந்த பெண்ணுக்கு உண்டு.
இந்த வரலாறு தெரிந்த மாப்பிள்ளை வீட்டாரும், ரொம்ப முரண்டு பிடிச்சா என்ன
செய்வது என்பதற்காக, பெண் வீட்டில் உள்ள இன்னொரு பெண்ணை தேர்வு செய்து
வச்சிருக்காங்க. ஆக, மொத்தத்தில் கட்டாய கல்யாணம் நடக்குமா, நிச்சயத்தோடு
நின்று போயிடுமா என்ற குழப்பம் இரு தரப்பிலும் நீடிக்குது.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை, இந்த அளவுக்கு யாராலும் கிண்டல் பண்ண முடியாது!
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குழு மாநில நிர்வாகி பெங்களூரு புகழேந்தி பேட்டி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னைக்கு வந்தார். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை உறுதி செய்தார். அவருடன் மேடையில் அமர்ந்து பழனிசாமியும், அவருடைய சகாக்களும் வேடிக்கை தான் பார்க்க முடிந்தது. 'பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது' என, பழனிசாமி பேசி ஏமாற்றியதை மக்களும், தொண்டர்களும் மறக்கவில்லை. தமிழகம் முழுதும் அ.தி.மு.க., - பா.ஜ.,வின் கட்டாய கூட்டணியை எதிர்த்து பிரசாரம் செய்வோம்.
'தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவோம்'னு சிம்பிளா சொல்லிட்டு போயிட வேண்டியது தானே!
தமிழக மாணவர் காங்., தலைவர் சின்னதம்பி பேச்சு: மாணவர்கள் மத்தியில் கவர்னர் ரவி பேசும்போது அறிவு, திறன், ஒழுக்கம் சார்ந்த விஷயங்கள் குறித்து பேச வேண்டும். வெறுப்பு அரசியலை பரப்பும் வகை யில் மதம் சார்ந்த விஷயங்களை பேசி, மாணவர்களின் வெறுப்பை தான் கவர்னர் ரவி சம்பாதிக்கிறார். உச்ச நீதிமன்றம், கவர்னர் ரவிக்கு எதிராக தெரிவித்த தீர்ப்பை தமிழகம் முழுதும் கல்லுாரி மாணவர்களிடம் விளக்கி பேசும் விழிப்புணர்வு இயக்கத்தை துவக்கி பிரசாரம் செய்வோம்.
இவரது மாநில தலைவர் நடத்திய போராட்டத்துக்கே, 175 பேர் தான் வந்தாங்க... இவரது விழிப்புணர்வு பிரசாரத்துக்கு எல்லாம் யாரு வரப்போறா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: தி.மு.க., ஆட்சியில், வேங்கை வயல் பிரச்னைக்கு சி.பி.ஐ., விசாரணை, பஞ்சமி நிலங்கள் மீட்பு, பட்டியலின மக்களுக்கு சமூக நீதி என எதுவும் நடக்கவில்லையே என்ற விரக்தியில், இலவு காத்த கிளியாகவும், கூண்டு கிளியாகவும் காத்திருப்பது வி.சி., தானே தவிர, அ.தி.மு.க.,வுக்கு அந்த நிலை இல்லை.
'அதான், எங்களுக்கு பா.ஜ., கூட்டணி பலமா அமைஞ்சி டுச்சே'ன்னு கெத்தா சொல்றாரோ?