PUBLISHED ON : ஏப் 21, 2025 12:00 AM

அ.ம.மு.க., துணை பொதுச்செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தமிழன் பேட்டி:
அ.தி.மு.க.,
கொடி விவகாரம் தொடர்பாக, அ.ம.மு.க.,வுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை
நல்லெண்ணத்தின் அடிப்படையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வாபஸ்
பெற்றுள்ளார். தே.ஜ., கூட்டணியில், அ.ம.மு.க., பயணித்து வருகிறது. அனைத்து
அரசியல் கட்சிகளும் ஆட்சியில் பங்கு பெற விரும்புகின்றன. தமிழக நலன் கருதி,
எந்த ஆட்சி தேவைப்படுகிறதோ அந்த ஆட்சி அமையும்.
தமிழகத்தில் தப்பித்தவறி கூட்டணி ஆட்சி வந்தாலும், இவரது கட்சிக்கு பழனிசாமி பங்கு தருவாரா என்பது சந்தேகம் தான்!
தமிழக, பா.ஜ., செயலர், எஸ்.ஜி.சூர்யா பேச்சு:
தி.மு.க., பத்தாண்டுகள், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவைகளை கேட்டு பெற்ற காலத்தில், சமஸ்கிருதத்தை விட தமிழுக்கு அதிக நிதி பெற்று கொடுத்த வரலாறு உண்டா... ஆட்சியில் இருந்தால் ஒரு நிலைப்பாடு; ஆட்சியில் இல்லையெனில் வேறொரு நிலைப்பாடு... தி.மு.க., என்றாலே இரட்டை வேடம் தான்.
அவ்வளவு ஏன்... மாநில சுயாட்சியையும் அப்பவே கேட்டிருக்கலாமே... ஒருவேளை நாம கேட்டாலும், அவங்க தர மாட்டாங்கன்னு தெரிஞ்சே மவுனமா இருந்துட்டாங்களோ?
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர், டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை:
தென்காசியில் ஒரு இளைஞரின் தலையை துண்டித்து, 15 கி.மீ., எடுத்துச் சென்று கோவில் முன் வைத்துள்ளனர். இது, ஒரு நாகரிக சமூகமா... சட்டம் - ஒழுங்கு சரியில்லை என சொன்னால், 'எல்லாம் இங்கே சரியாகவே இருக்கிறது' என, முதல்வர் கூறுகிறார். சட்டத்தின் மீதோ, போலீஸ் துறையின் மீதோ சிறிதேனும் மதிப்போ, மரியாதையோ, அச்சமோ இருந்திருந்தால் இதுபோன்ற கொடூர கொலையை நடத்தும் துணிவு வந்திருக்குமா?
முதல்வர், 'அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சம்பவங்களை பெரிதுபடுத்துறாங்க'ன்னு அங்கலாய்க்கிறாரு... ஆனா, அத்தகைய கொடூரங்கள் அனுதினமும் நடக்குதே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் பேட்டி:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி இடையே பேச்சு நடத்தப்பட்டு, 2026 தேர்தலில் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. தி.மு.க., அரசை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்துள்ளோம். பா.ஜ.,வுடன் எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. அ.தி.மு.க.,- - பா.ஜ., கூட்டணி கடவுளால் உருவாக்கப்பட்ட கூட்டணி.
இவரது கட்சியின் மூத்த தலைவர் ஜெயகுமார், இந்த கருத்தை ஏத்துக்குவாரா?

