PUBLISHED ON : ஏப் 25, 2025 12:00 AM

திருப்பூர் தொகுதி இந்திய கம்யூ., - எம்.பி., சுப்பராயன் பேட்டி: பிரதமர்
மோடி, 100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுத்து விட்டு,
இத்திட்டத்திற்கு ஒதுக்கும் பணத்தை குறைத்து வருகிறார். மோடி அரசு, ஏழை
மக்களின் பரம விரோதி. பார்லிமென்டில் நாங்கள் எழுப்பிய குரலுக்கு, நிதியை
விடுவிப்பதாக தெரிவித்தனர்; ஆனால், இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை.
இன்னும், 15 நாட்களுக்குள் நிதியை விடுவிக்காவிட்டால், கடுமையான, வலிமையான
போராட்டம் வெடிக்கும்.
கம்யூனிஸ்ட்களின் வலிமையான, கடுமையான போராட்டம் எப்படியிருக்கும்னு பார்க்கலாம் என்றே, மத்திய அரசு நிதியை நிறுத்தி வச்சிருக்குதோ?
தமிழக கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன் குமார் பேட்டி: எந்தவித முகாந்திரமும் இன்றி சமீபத்தில், சிமென்ட் விலை 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 'எம்-சாண்ட்' போன்ற மணல் விலை உயர்வும் கட்டுமானத் தொழிலை பாதிக்கும். விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். இதுகுறித்து முதல்வரிடம் பேச உள்ளோம்.
கனிம வளங்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியதால் தானே, சிமென்ட், மணல் விலைகள் உயர்ந்திருக்கு என்ற உண்மை இவருக்கு தெரியாதோ?
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் பேட்டி: சட்டசபையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயசீலன் பேசுகையில், ஐ.டி., பார்க் அமைத்து தருமாறு கேட்டதற்கு, அமைச்சர் தியாகராஜன், 'என்னிடம் கேட்காதீர்கள். எந்த அதிகாரமும் என்னிடம் இல்லை. யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறதோ அவர்களிடம் கேளுங்கள்' என்கிறார். அதிர்ச்சி அடைந்த சபாநாயகர் அப்பாவு, 'இப்படி பேச வேண்டாம்; 'பாசிட்டிவாக பேசுங்கள்' என, அறிவுரை கூறுகிறார். அமைச்சருக்கே இந்த நிலைமை என்றால், அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதுதான் மக்கள் கேட்கும் கேள்வி?
இனி, தியாகராஜன் இப்படி பேச மாட்டார்... அவருக்கு முதல்வர் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துட்டாரே!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேச்சு: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் அ.ம.மு.க., உள்ளது. அ.தி.மு.க.,வில் அ.ம.மு.க.,இணைவது போன்ற யூக மான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. இலை மீது தாமரை மலர்வது இயல்பு. அதே நேரத்தில் தாமரை, இலையை அழுத்துவதில்லை. இதுகுறித்து, பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதிலும் தவறில்லை. கூட்டணி அமைந்ததை உவமையாகக் கூறி உள்ளார்.
உவமை எல்லாம் நல்லாதான் இருக்கு... ஆனா, இலையை மீறி தாமரைதான் எல்லார் கண்களிலும் 'பளிச்'சுன்னு படும்!

